Monday, June 29, 2015

மனிதனின் மூன்று வாழ்வு
பயணங்களின் சுவாரசியம் ஊரும், அது சார்ந்த தகவல்கள் மட்டுமல்ல. நம் பார்வையில் அது தந்து போகின்ற அனுபவங்களும்தான்.
.எனது கணவர் மருத்துவத்துறை சம்பந்தமான கான்பிரன்ஸ்க்கு போக முடிவெடுத்தபோது, வித்தியாசமான பேரைக் கேட்டு நானும் உடன் செல்லத் தீர்மானித்திருந்தேன்.
சிங்கப்பூர் வழியாக பாலித்தீவு சென்று இறங்கிய போது இளவெயில் வரவேற்றது.
இந்தோனேசியாவில் உள்ள ஒரு தீவு பாலி. பாலி இந்துத்துவம் என்பது புத்த, இந்து மதங்களின் கலவையாக உள்ளது. சைனா, இந்தியா, ஜாவா தீவுகளின் பாதிப்பினால் உருவான கலவையான இந்து மதமே பாலித் தீவில் உள்ளவர்களுடையது ஆகம இந்து தர்மா என்று அழைக்கப்படுகிறது.இவர்கள் 8 மற்றும் 16ம் நூற்றாண்டுகளில் ஜாவா தீவு வழியாக வந்த இந்தியர்களாகக் கூட இருக்கலாம் என நம்பப்படுகின்றது மகாபாரத காட்சிகள் நகரின் பிரதான சாலையை சிற்பமாகி அலங்கரிக்கின்றன.  .
விமான நிலையத்தில் இறங்கியதும் பாலித்தீவின் காசு மாற்றிக் கொண்டோம். திடீரென எல்லாரும் லட்சாதிபதிகளாகிப் போனோம். 1 ரூபாய்க்கு 260 ரூபாய் என்றார்கள். 20000 ரூபாய் மாற்றினால் 52, லட்சம் ரூபாய் கையில் கொடுத்தார்கள். மதிப்பில்லாத சைபர்களோடு மல்லுக் கட்டுவதின் சிரமம் அப்பொழுதுதான் புரிந்தது.
சொகுசுப் பேருந்தில் விடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். ஒரு பழமையான அதே நேரம் உயிர்ப்புடன் இருக்கும் நகரத்திற்குள் நுழைவது போல் பிரம்மை வருவதை தவிர்க்க முடியவில்லை. பொதுவாக பழமையான நகரமென்றால், அருங்காட்சியகத்திற்குள் அடைபட்ட பழைய வாசனையோடு உயிர்ப்பில்லாத சுவடோடு இருக்கும். ஆனால் இந்த நகரமோ பழமை வாசனையை உயிர்ப்போடு வண்ணங்களோடு வைத்திருக்கிறது. கட்டிடங்கள் புது வர்ணங்கள் வெளுக்காமல் நமை கால இயந்திரத்தில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் இழுத்துச் செல்வது போல் உணர்ந்தேன்.
திடீரென காலத்தால் முந்தைய உலகிற்கு நான் போனது போல ஒரு பிரமிப்பை   தோற்றத்தால் மட்டுமன்றி அனுபவங்களாலும் கதைகளாலும் நிரப்பியது பாலித்தீவு விடுதிக்குள் நுழைந்ததும் இனிய அதிராத தந்தி இசை எனை இன்னும் பின்னோக்கி இழுக்கின்றது. விடுதியின் வரவேற்பு முழுக்க பழமை, இயற்கைக் கலைப் பொருட்களாய் நிரப்பப்பட்டிருக்க இரு பெண்கள் பாரம்பரிய உடையணிந்து எங்கள் காதுகளில் நுழைந்து கொண்டிருந்த இசைக்கு நடனமாடுகிறார்கள். நடனமாடிய பெண்கள் உடலிலும் கூட அலங்காரப் பொருட்களாக தென்னை ஓலை போன்ற இயற்கைப் பொருட்களே அதிகம்.
ஓய்வெடுத்துவிட்டு நகரைச்சுற்றிப் பார்க்க கிளம்புகிறோம். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நம் வீட்டு மாடக்குழி போல் சிறிய ஆனால் அலங்காரமான கோவில் போன்ற அமைப்பு உள்ளது. தினப்படி வழக்கங்களால் அவர்கள் நம்புகின்ற இந்துத்துவ பண்பாடுகள் சிதையாமல் இன்றளவும், இவ்வளவு சுற்றுலா  நாடாக அந்நாடு மாறிவிட்ட பிறகும் கைப்பற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
காலையில் இரு  வகையாக பூஜை செய்கிறார்கள். வீட்டிற்குள் நல்ல தெய்வங்கள் வந்து குடியிருக்கச் சொல்லியும், வாசலுக்கருகில் தீய சக்திகள் உள் வராதிருக்ககோரியும் பூஜை நடத்தப்படுக்கிறது, அரிசி, பூக்கள், பிஸ்கட்டுகள் என எளிமையாக பூஜைகள் நடைபெறுகின்றது. வீட்டுக்குள் பார்க்க முடியவில்லை. கடை வீதிகளுக்கு செல்லும் போது எல்லார் கடையிலும் அன்றைய பொழுது துவக்கத்திற்காக பூஜை நடந்தது. எல்லார் நெற்றியிலும் சிறு அரிசிகள் ஒட்டிக் கொண்டிருந்தது நம்முடைய திருநீறு போல. கடை வீதிகளில் ரொம்பவும் அந்நியோன்யமாக பேசும் மக்கள், “நான் யாரையாவது ஏமாற்றினால் அடுத்த பிறவியில் பிராமணனாய் பிறக்க முடியாது” எனவே நியாயமான விலைதான் என்று சொன்ன கடைக்காரரின் மனோநிலை தந்த அதிர்ச்சியிலிருந்து மீள நெடுநேரம் பிடித்தது.
  இவர்கள் வாழ்வு 3 அடிப்படைகளைக்  கொண்டுள்ளது. 
மனிதன் கடவுளாதல்
மனிதன் மனிதனாதல்
மனிதன் இயற்கையாதல்
மனிதன் கடவுளாதல், அடிப்படையில் நற்செயல்களே நமது வாழ்விற்கு காரணம் என்பதை தொழில் நடக்கும் இடத்தில் கூட நம்புகிறார்கள் என்பதை சொன்ன வசனமிது.
மனிதன் இயற்கையாதலுக்கு எங்களது வழிகாட்டி பயண இடைவெளியில் சொன்ன சம்பவம் பெரும் அனுபவமாயிருந்தது.
பாலி கடலும் கடல் சார்ந்த இடம் மட்டுமல்ல மலையும், மலை சார்ந்த இடமும் கூட, எரிமலைகள் அதிகம் உள்ள இடம். அப்படி ஒரு காட்டிற்குள் பழங்குடியினர் வசிக்கின்றனர். அங்கு நாம் செல்ல அனுமதி கிடையாது. அங்கு ஒரு மரம் உண்டு, மரத்தினருகில் எந்த மோசமான நாற்றமும் இருக்க முடியாது அந்த பழங்குடிகள் இறந்து போனவர்களை அப்படியே மரத்தினடியில் போட்டு விடுவார்கள்   எந்த நாற்றமும் இருக்கவே இருக்காது என்று சொன்னார். மனிதன் இயற்கையாதல் என்பதற்கு அவரது கதை சுவாரசியமானதாக இருந்தது. 
அவர்களுடைய கட்டிடக்கலை கூட தத்துவார்த்தமாகவும் ஆன்மீக அடையாளமோடும்தான் உள்ளது. 3 லோகங்கள் உள்ளது என்ற அடிப்படையில்  சில கட்டிடங்கள் உள்ளது. பூர்லோகா (விலங்குகளுக்கும் அரக்கர்களுக்குமானது) புவலோகா (மனிதனுக்கானது) சுவர்கலோகா (கடவுளுக்கும், தேவதைகளுக்குமானது) அவர்கள் கட்டிடக் கலையில் நிறைய வெற்றிடம் விடுவதை வரவேற்பவர்களாக இருக்கிறார்கள்.
சமஸ்கிருத வார்த்தைகள் அவர்கள் மொழியெங்கும் வாழ்வெங்கும் விரவிக் கிடக்கின்றது. வைசிய, சத்ரிய, சூத்ர, பிராமண பிறப்பை கடுமையாக நம்புகின்றனர். 
சிவன் விஷ்ணு பிரம்மா கடவுள்களின் மேல் அதீத நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கிறார்கள். காக்கும் கடவுளான விஷ்ணுவின் கோவில்  ஊரின் நடுவிலும், பிரம்மா சிவனின் கோவில்கள் ஊருக்கு இரு எல்லைகளிலும் வைக்கப்படுவதாக சொன்னார் வழிகாட்டி. எந்த கோவிலுக்குள்ளும் சுற்றிப் பார்க்க அனுமதிக்கவில்லை. கோவில் சுற்றுலா தலமல்ல வழிபாட்டுக்குரிய இடம் என்று சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மறுக்கிறார்கள்.
 Tanah lot  என்ற கடற்கரையை ஒட்டியிருந்த இயற்கையிலேயே அமைந்த அந்த கோவிலுக்கு எங்களை அழைத்துச் சென்றார்.  வழி நெடுக கலைப் பொருட்களாலும் இசைக்கருவிகளாலும் நிரம்பிய கடைகள் முளைத்திருக்கின்றன. இசைக்கருவிகள் எல்லாமே சிரட்டை,  வித விதமான மர விதைகள் என மிக வித்தியாசமாக நம்மை ஆச்சரியப் படுத்துக்கிறது  மாலை நேரம் பார்க்க இனிமையான கோவில். மேற்கு கடற்கரையில் உள்ளது ஆனால் கோவிலுக்குள் அனுமதியில்லை என்று சொல்லி விட்டார்கள்.  கடல் நீருக்கு நடுவில் ஒரு பெருங் கற்மலை கிடப்பதை போலுள்ளது. நாங்கள் போயிருந்த நேரம் நீர் வடிந்து கற்மலை வரைக்கும் போக முடிந்தது. சில நேரம் நீர் சூழ்ந்து விடும். அந்த கடல்நீர் அரித்த கற்பாறைக்கிடையில் ஒரு நன்னீர் ஊற்று. புனித நீராக ஓடிக்  கொண்டிருந்தது. அதற்கு அருகில் இருந்த ஒரு குகை போன்ற பகுதியில்  பாம்பை வைத்துக் கொண்டு ஆசீர்வதித்துக் கொண்டிருந்த நபர் இருந்தார். பார்த்துக் கொண்டிருந்த போதே பாரம்பரிய நடனமோடும், இசையோடும், உடையோடும் கோவிலை நோக்கி ஊர்வலம் போய்க் கொண்டிருந்தது.

நம்பிக்கைகளாலும் இயற்கையாலும்  நிறைந்த வாழ்க்கை அவர்களது.

Friday, June 26, 2015

பேச மறந்த குறிப்புகள்


                         பேச மறந்த குறிப்புகள்
                                                             திலகபாமா
எனை அடுத்து பெண்கள் படைப்புகள் பற்றி பேச வந்த அபிலாஷ், ரொம்ப சுவாரசியமான பேச்சாக தனது பேச்சை முன் வைத்தார். 5 பெண் கவிஞர்களை முன் வைத்து பேசத் தொடங்கிய அவர் அவர்களை பாராட்டுவதாக தொடங்கிய போதும் ஒவ்வொருவர் கவிதைக்கான கோட்பாடுகள் எவை எவை, யார் யாரை பின்பற்றி எழுதுகின்றார்கள், அவர்களின் பாடுபொருள் என்ன, எனப் பேசத் தொடங்கினார். 
அவருடைய பேச்சின் சாராம்சத்திலிருந்து எனது புரிதலுக்கானவை
 1. அவர் குறிப்பிட்ட  கவிஞர்களின் கவிதைகளும் சில ஆண் கவிஞர்களின் கவிதைகளை ஒட்டியே இருப்பதாக முன் வைத்தது.
 2. ஒரு கவிதையை காண்பித்து இக்கவிதை எத்தனை பேருக்கு புரிகிறது கையை உயர்த்துங்கள் என வகுப்பு நடத்தும் பாணியில் கேள்வி வேறு
கவிதை எனக்கு மட்டுமே புரிகிறது என்ற மேடையில் இருந்து  அபிலாஷ் உரையாடல் தொடங்குகின்றது.
 1. கவிதைக்குள் இருக்கும் உணர்வை சொல்லாமல், கதை இருப்பதாய் இட்டுக் கட்டுவது, சீப்பை பார்த்த பிறகு, இதனால் திருமணம் தடைபட்டிருக்கலாம் என காட்சிப்படுத்த முயலுவதாய் அவரது உரையாடல்கள் இருந்தன.
என் கட்டுரையில் நான் இலக்கிய விமரிசன உலகம் என்ன செய்யும் என்று சொன்னதற்கு சாட்சியமாய் அவரது பேச்சு இருந்தது.
 • தான் நினைத்த ஒன்றை பெண் குரலாக வாசிப்பது
 • தனது அளவீடுகளுக்குள், அல்லது தனது கண்ணாடி வழியாக எல்லாவற்றையும் வாசிப்பது.
 • தனிமனித அடையாளங்களோடு சேர்ந்து படைப்பை வாசிப்பது.
 • கெட்டிக்காரத்தனமாக வேட்டையாடினாள் என்பதாக, பாராட்டுவது போல் அவள் வேட்டையாடியதை போட்டுக் கொடுப்பது.  வேட்டையாடுவது தவறு என்று சொல்ல மாட்டாராம்.
கறை நல்லது, பொய் நல்லது என்பது போன்றவைகள் உங்களை நடுநிலைவாதியாக காண்பிப்பதாக நீங்கள் நம்பினால் நான் பொறுப்பல்ல.
 • நிஜமாகவே புதிய குரல்கள் வருகையில் அதன் மதிப்பை இதற்கு முன்மாதிரிகள் இல்லாததாலேயே  நிராகரிப்பது.
இப்படியான எல்லா குரலுக்கும் சாட்சியமாக அபிலாஷ் உரை இருந்தது.
ஆண்களின் படைப்புகளை பெண்கள் விமரிசனம் செய்யத் தொடங்கினால், இன்னும் பல பார்வைகள் வெளியே வரும். ஆனால் அப்படி விமரிசனம் செய்வதை, ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்தவர்கள் ஆண்கள் என்ற முறையில் வைக்கப்படும் விமரிசனத்தை, மூத்தோர்களை நிராகரிக்கின்றார்கள் பெண்கள் என்று வாசித்து விடக் கூடிய அபாயமும் முன் எழுதிக் கொண்டிருந்த ஆண்களின் படைப்புகளை ரசித்த விசயத்தை சொல்லும் போது அவர் வழியில் எழுதுகின்றார் என்று மொன்னை வாசிப்பை நிகழ்த்தி விடவும் வாய்ப்பிருக்கின்றது என அபிலாஷ் பேச்சு நிரூபித்தது .
பெண் படைப்புகள் குறித்து பேசுவதற்கு பெண்கள் பகுதியிலிருந்து விமரிசனக் குரல்கள் குறைவு என்பதும், ஆண்கள் விமரிசனத்தின் வழியாகவே இலக்கியம்  வாசிக்க வேண்டியிருப்பதும் தவிர்க்க முடியா காலச் சூழலே.
இரண்டு கேள்விகளை கூட்டத்தினர் என் முன் வைத்தனர். 
 1. தூப்புக்காரி போன்ற  சமூக நாவல்கள் பெண்களால் ஏன் எழுதப்படவில்லை என்பது 
 2. 500 பக்க நாவல்கள் ஏன் பெண்களால் எழுதப்படுவதில்லை.
 • திலகவதியின் கல்மரம்
 • அழகியநாயகி அம்மாளின் கவலை
 • சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை 
போன்று சில நாவல்களை உங்கள்  கேள்விகளுக்கு பதிலாக காண்பிக்க முடியும். ஆனால் பக்கங்கள் மட்டுமே நாவலின் தரமாக கேள்வி இருப்பதை ஒத்துக் கொள்ள முடியாமல் இப்படி ஒரு பட்டியலிடுவதை தவிர்க்கவே நினைக்கின்றேன். நாவலின் தரம், நல்ல நாவலுக்கான இடம் வெறும் 500 பக்கங்களைத் தாண்டுவதில் இல்லை. 500 பக்கங்களைத் தாண்டுபவர்கள் ஒட்டு மொத்தமாக கூட்டிக் குவித்துக் கொண்டு வந்து சேர்ந்திருக்ககும் தகவல்களில், ஏதேனும் ஒன்றையாவது வாசகனும், விமரிசகனும், படைப்பாளியும் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கும் தருணத்தில் எதிர்மறை விமர்சனத்திலிருந்து தன்னை தப்புவித்துக் கொள்கின்றார்கள்.
ஒரு ப்ளேடு விளம்பரத்தில், அறுத்துவிடும் பயத்தில் சவரம் செய்து கொண்டிருக்கும் தருணத்தில் மனைவி புடவை வாங்க  அனுமதி கேட்டு விடுவது போல் காண்பிப்பார்கள்.
அது பல தலையணை நாவல்களுக்கு பொருந்தக் கூடியதாய் இருந்து விடுகின்றது. நாமே நம் கழுத்தில் கத்தி விட்டு சம்மதம் வாங்கிப் போகின்ற வேலையைத் தான் 500 பக்கங்களுக்கு அதிகமாக இருக்கின்ற நாவல்கள் செய்து விடுகின்றன.
எனவே தரத்தை தீர்மானிக்க, பெண்கள் எதையும் அழுத்தமாக செய்வதில்லை என ஸ்தாபிக்க இந்த கேள்விகள் பயன்படுவதை அனுமதிக்க முடியாது.
தூப்புக்காரி போன்ற “சமூக நாவல்கள்”. இந்த சமூக நாவல்கள், என்ற அடைமொழிக்குள் இந்நாவலை கொண்டு செல்வதன் மூலம், ஏனைய மற்ற பெண்களின் நாவல்கள்  சமூக நாவல்கள் இல்லை என சொல்ல வருகிறீர்களா?அல்லது இன்னாவலில் பெண் அகஉணர்வு இல்லை என்று சொல்ல வருகின்றீர்களா?
எனது நாவலான கழுவேற்றப்பட்ட மீன்கள் நாவலில்
 1. உலகமயமாக்கலின் பாதிப்பில் குடும்பச் சிக்கல்கள் என வாசிப்போரும் உண்டு.
 2. பெண் அகவயப் பிரச்சனைகள் உணர்வு தளத்திலிருந்து பேசப்பட்டிருக்கின்றன என்று சொல்லுவோரும் உண்டு.
உலகமயமாக்களின் பாதிப்பு என்று சொல்வதன் மூலம் பெண் உணர்வு வாசிக்கப்படாமல் நிராகரிக்கப்படுவதை அனுமதிப்பதா?
பெண் அகவுணர்வுச் சிக்கல்களாக வாசிப்பதன் மூலம், உலகளாவிய பிரச்சனைகள் இந்நாவலில்  பேசவில்லை என்பதை அனுமதிப்பதா?
ஆய்வு மாணவர்கள் அடிக்கடி கேட்கின்ற கேள்வி, பெண்கள் பிரச்சனைகளை எழுதும் நீங்கள் எப்பொழுது சமுதாய பிரச்சனைகளை எழுதப் போகிறீர்கள் என்பது?
இக்கேள்வி எவ்வளவு அலட்சியமாக பெண்கள் பிரச்சனைகள் சமுதாயத்தின் பிரச்சனைகள் அல்ல என்று மனரீதியான  பதிவு சமூகத்திடம் இருப்பதை அடையாளம் காட்டி விட்டுப் போகின்றன.
ஏற்கனவே பிரபலமடைந்தவர்களைப் பற்றி மட்டுமே பேசி அந்த வெளிச்சத்தை தன் மேல் போர்த்திக் கொண்ட அபிலாஷிற்கு வாழ்த்துக்கள். அதன் மூலம் ஏனைய கவிஞர்களை இருளில் தள்ளும் வேலையை (காலம் கருதி என்று சொன்னாலும்) அறிந்தே செய்கின்றார். இது நவீன தமிழ் இலக்கிய உலகிற்கு பெண் படைப்பாளிகளுக்கு புதிதில்லை. தான் விரும்புவதை மட்டுமே சொல்வது நடுநிலை அல்ல. எந்த கோட்பாடுகளுக்குள்ளும் , அடைமொழிகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத பெண் படைப்பாளிகள்  அபிலாஷின் வாசிப்பிலிருந்து விலக்கியிருப்பது இலக்கிய உலகின் முன் தீர்மான அளவு கோலுக்கும் அவரது வாசிப்பு இயலாமைக்கும் சான்றாக இருக்கின்றன,
இருமைத் தன்மைக்குள்ளாக மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது போய் பன்மைத் தன்மைகள் வந்து விட்ட கால கட்டத்தில் உடல்மொழி, உடல்மொழி எதிர்ப்பாளர்கள் என்ற இருமைத் தன்மையை மட்டும் மனதில் வைத்து பேசும் மொன்னையான விமரிசனம் இது. பெண் படைப்புகளின் பன்மைத் தன்மையை நிராகரிக்கும் தனம்.


Thursday, June 25, 2015

இட ஒதுக்கீடு எதிர்ப்பு

உரை
அகில இந்திய ஷத்ரிய நாடார் சங்கத்தின் நிறுவனரும் இட ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கத்தினை ஒருங்கிணைப்பு செய்திருக்கும் வீரமணி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும்  வாழ்த்துக்களையும்  இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைபட்டிருக்கின்றேன். அகில இந்திய ஷத்ரிய நாடார் சங்கம் என்று சங்கத்தின் பெயரினை அழுத்தி உச்சரித்ததற்கு  காரணம் ஒவ்வொரு சங்க பெயருக்குப் பின்னால் இருக்கும் போராட்ட வரலாறுகள். நீ ஷத்ரியன், நீ சூத்திரன், நீ வைசியன், நான் பிராமணன் என்று சொல்லி சமூகத்தினரிடையே  பிரித்தல்களை ஒரு சமூகம் முன் வைத்த போது அதை எதிர்த்து  நீ மேலிருந்து பிறந்தாயா? நான் காலிலிருந்து பிறந்தேனா?  இதை சொல்வதற்கு நீ யார்? அப்படி கேள்விகளை எழுப்பி, ஷத்ரியன் என்ற சொல்லை சொல்ல  மாட்டேன் என்று நிராகரித்த  சமூகம் நம் சமூகம் தான். அதே சமயம் ஷ போன்ற வடசொல் உச்சரிப்புக்கள்தான்  இந்த மந்திரங்கள்தான் அவனை உயர்த்திக் கொண்டு போகின்றதோ அப்படியான நினைப்பைக் கொண்டு வந்து, ஏன் நானும் பிராமணன் போலவேதான். நானும் என் மக்களும் இந்த உச்சரிப்புகளை சொல்வோம். பழக்கம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்  என்பதனை உணர்ந்து,  ஷத்ரியன் என்கிற சொல்லைப் பழக்கணும் என்று ஒவ்வொரு அமைப்புக்குப் பின்னாலும் ஷத்ரியன் என்ற வார்த்தையை கொண்டு வந்து சேர்த்து அதனை ஒரு போராட்டமாக செய்ததும் நமது சமுதாயம்தான். ஒரு பேரைச் சொல்லலாம் சொல்ல வேண்டாம் இரண்டிற்கும் இடையிலேயே இந்த சமூகத்திற்கான சமுதாய வளர்ச்சியினை ஒரு அடித்தளத்தினை போட்டு காண்பிக்க முடிந்திருக்கின்றது என்பதனை இந்த பெயர்கள் கூட நிரூபித்து காண்பித்துள்ளது. 
முக்கியமாக இரண்டு விஷயங்களுக்கு வீரமணியை பாராட்ட வேண்டும். இட ஒதுக்கீடு எதிர்ப்பு  அப்படி நீங்கள் சொன்னால் நீங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஆட்களாக அடையாளப்படுத்தப்படுவீர்கள் அப்படியொரு அச்ச உணர்வும்,  அரசியலில் அதற்கு எங்களுக்கான இடம் இல்லாமல் போகும் என்ற பயமும்தான் பலரை சில இடங்களில் உண்மைகளை பேச விடாமல் செய்கின்றது. அதையும் தாண்டி இந்த தலைப்பில் அமைந்த  அழைப்பிதழை நான் முகநூலில் வெளியிட்டேன். வெளியிட்ட உடனே எனக்கு சில மணி நேரங்களில் நான்கு பேர் நீங்கள் எப்படி இந்த கூட்டத்திற்குப் போகலாம்? நீங்கள் பொதுஜனவாதி இல்லையா? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானவர் இல்லையே?  என்ற கேள்வியை முன் வைத்தனர். இவையெல்லாம் தாண்டி சில உரையாடல்கள் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக நின்று இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக வீரமணி  அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் கத்திரிக்காயின் விலை மட்டுமே பெண்களுக்குத் தெரியும் என எண்ணிக் கொண்டிருக்கும் ஆண்கள் மத்தியில் அதிக எண்ணிக்கையிலான பெண்களை அழைத்து கூட்டம் நடத்துவதற்காகவும் வீரமணி அவர்களை பாராட்ட வேண்டும். ஏனென்றால் சமுதாயத்தின் முதல் வளர்ச்சியானது பெண்களிடமிருந்தே தொடங்கியது. பெண்கள் கொடுத்த பிடியரிசியில்தான் காமராசரின் அரசியல் வாழ்க்கை ஒரு மிகப்பெரிய தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  பெண்களினால் கொடுக்கப்பட்ட பிடியரிசியினால்தான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சாலைகளும் போடப்பட்டது. அப்படியானால் பெண்கள் அரசியலுக்குள் அரசியல் விஷயங்களை பேச முன் வந்தால் இன்னும் நிறைய விஷயங்கள் உண்மையாகவும் ஆத்மார்த்தமாகவும் மாறக்கூடிய வாய்ப்பு எப்பவும் இருக்கின்றது. அதனால்தான் பெண்களை எதுவும்  செய்ய விடாமல் வீட்டிற்குள் வைக்கின்றனர். நாங்கள் மட்டும் விஷயங்களைப் பேசிக் கொள்கிறோம், நாங்கள் மட்டும் எங்களுக்குத் தேவையான விசயங்களை செய்து கொள்கிறோம் என்பதல்லாமல் அதைத்தாண்டி, பெண்களை இவ்வரங்கத்திற்கு கொண்டு வந்ததற்கு வீரமணிக்கு இன்னும் ஒரு சிறப்பு பாராட்டினைத் தெரிவித்துக் கொள்கிறோம். .இன்று இந்த அரங்கத்தில் நாம் அனைவரும் பாரதீய கல்சூரி என்று  உச்சரிப்பதற்கு மிகவும் சிரமப்படும் ஒரு சங்கத்தின் பெயரினைக் கூறுகிறோம். பாரதீய கல்சூரி என்பது தமிழகத்தில் நாடார் போலவே மற்ற மாநிலத்திலும் பனைமரம், தென்னைமரம் இவற்றோடு தொடர்புடைய வணிகத்திலும் அதிக ஈடுபாடுகள் கொண்ட 30 இனங்களை ஒருங்கிணைக்கும் அமைப்பாகும். மத்தியில் இருக்கும் அரசியல் அதிகாரங்களை பெறுவதற்கு ஒருங்கிணைந்து சமுதாய வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு உழைப்பதே இவ்வமைப்பின் நோக்கமாகும்
. ஒவ்வொரு காலகட்டத்திலும் சமுதாய முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர்களும் கூட தமது சுய ஜாதி இனப்பற்றை மட்டும் வைத்துக் கொண்டு இருக்காது தன்னுடைய சுய ஜாதியையும் சேர்த்து அதற்கு கீழாக யார்யார் எல்லாம் ஒடுக்கப்பட்டு இருக்கிறார்களோ அவர்களுக்கும் சேர்ந்ததான பணிகளையே செய்து கொண்டிருந்தனர். நாம் நன்றாக கவனித்தால் கல்வி, படித்தால் ஒருவன் முன்னுக்கு வந்திடலாம் படிப்பு ஒன்றே அனைவரிடமும் போட்டியிட தகுதியை உருவாக்கும் என்பதை அறிந்து திரும்ப திரும்ப கல்வியின் தேவையை உரைத்துக் கல்விச் சாலைகளை கொண்டு வருகின்றனர். அதுவும் சாதாரணமாக அல்லாமல் தனி நபரினால் பள்ளிகள் அமைக்க முடியாது என்பதனை அறிந்து ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள வாரிசுகள் இல்லாத தம்பதியினரின் சொத்துக்களை கையகப்படுத்தி அவர்களின் பெயரில்  பள்ளிக்கூடங்களை அமைத்தனர். 1910ல் நமது நாடார் மகாஜன சங்கம் அறிவித்த சட்டம் இது. இது கேட்பதற்கு சாதாரணமாக இருப்பினும் இதுவே ஒவ்வொரு கிராமங்களிலும் பள்ளிக்கூடம் உருவாக காரணமாக அமைந்தது. அதைத்தவிர ஒவ்வொரு இடத்திலும்  ஒடுக்கப்பட்ட அடிவாங்கும் இனமாக நாங்கள் இருக்கிறோம் என்பதை தலைவர்கள் உணர்ந்து  இந்த இனத்தை பலப்படுத்த வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். பலப்படுத்துவதற்காக நந்தவனங்களைக் கொண்டு வருகின்றனர். ஒரு அடிப்படையில் மட்டுமே எந்த முன்னேற்றமும் வந்து சேரவில்லை. பல்வேறு அடிப்படைகளிலேயே இந்த முன்னேற்றம், நாம் வாழுகின்ற வாழ்க்கை வந்து சேர்ந்திருக்கின்றது. நந்தவனம் மட்டுமின்றி தினமும் குளித்து உடற்பயிற்சி செய்தல் முதற்கொண்டு  எல்லாவற்றையும் அவர்கள் கொண்டு வருகின்றனர். அதற்குப் பின் அவர்கள் கொண்டுவரும் மிகவும் முக்கியமான செயல்பாடு மகமை. இந்திய அரசிற்கே முன் உதாரணமாக  எப்படி வரி வசூலிக்கலாம் என்பதை தந்தது, சுயநிதிக் குழுவினை அமைத்து எவ்வாறு சுய தேவையினை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பதனை ஆரம்பத்திலேயே துவக்கிய துவக்கப்புள்ளி நாடார்களே. அப்படியொரு யாருமே செய்திடாத ஒரு செயலின் மூலம்  எல்லாரும் சேமித்தனர். மற்றவர்கள் சேமித்ததை நெல்லு கலத்தினுள்ளும், சுவரினுள்ளும், பூமியிலும் வைத்தனர் ஆனால், சேமிப்பை பொதுவான ஒரு  மகமையாக கொண்டு வர வேண்டும் என்பதனை நாடார்களே முதன்முதலில் செய்து காண்பிக்கின்றனர். சல்லிக்காசினை முதன் முதலில் கொடுக்க ஆரம்பிக்கின்றனர். விளக்கேற்றுதல் எனக்கூறி இதுதான் நம் தெய்வம் இதற்கு சல்லிக்காசு கொடுக்க வேண்டும் எனக்கூறி வாங்கி சேமிக்கின்றனர். இந்த சல்லிக் காசினில் 350 ரூபாய் சேர்ந்தவுடன் தெற்கு மதுரையில் ஒரு பள்ளிக்கூடத்தினைத் தொடங்குகின்றனர். இதுமட்டுமல்ல இன்று நாம் பெரிய கட்சிகள் என்று சொல்லப்படும் திராவிட பாரம்பரியங்கள் அவர்கள் கொண்டாடுகின்ற யாவுமே புத்திஜீவிதமான எல்லா விசயங்களுமே நாடார் வரலாற்றிலிருந்தே பெறப்பட்டவையாகும். வேற எந்த இனமும் இந்த அளவுக்கு எடுத்துக் கொடுக்கவில்லை.  ஏனென்றால் எப்பவும் நான் ஒடுக்கப்பட்டவன்  நான் அதிலிருந்து வெளிவர வேண்டும் யாரையும் எதிர்பார்க்காமல் வெளிவர வேண்டும் என்பதனை யோசித்துக் கொண்டே இருப்பவனாக நாடான்  இருந்தான். அவனுடைய  செயல்பாடுகள் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் ஒரு உதாரணமாக மாறிப் போய்விடுகின்றன. சீர்திருத்த திருமணங்கள் இது குறித்து பெரியார்  மற்றும் பிற அமைப்புகளோ பல்வேறு கோணங்களில் பேசிக் கொண்டு இருக்கின்றது. இது எல்லாவற்றிற்கும் ஆதாரமாக எடுத்துக் கொடுத்தது நாடார் இனமே ஆகும். நாடார் வீடுகளில் நடைபெறும் திருமணங்களை எந்த பிராமணனும் செய்து வைக்கவில்லை.   எனக்கான திருமணத்தை நானே செய்து கொள்வேன்  எனக்கான கோவிலை நானே கட்டிக் கொள்வேன்  என்ற உறுதியுடன் வாழ்ந்தனர். உன்னுடைய விதிமுறைகள் தேவையில்லை எனக்கூறி  கோவில் நுழைவு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில்  ”உங்கள் கோவில் எனக்கு வேண்டாம் என் பத்திரகாளி தெய்வத்திற்கு நானே கோவில் கட்டிக் கொள்கிறேன்”  அப்படியாக தனக்கான ஒரு முறையைக் கொண்டுவந்து அடிப்படைப் பின்னணியைக் கொடுத்தது நாடார் இனம்தான். அப்படிப்பட்ட இடத்திலிருந்துதான் இடஒதுக்கீடு எதிர்ப்பு என்ற கருத்தரங்கத்தினை வீரமணி அவர்கள் கொண்டுவந்திருக்கின்றார்.  இந்த வார்த்தைக்குப் பின்னால் அவர் என்ன அர்த்தம்  கொண்டிருக்கின்றார் என்பது ஒருபுறம் இருக்கட்டும் என்னைப் பொறுத்தவரை நான் இதை எப்படி பார்க்கிறேன்  இந்த இட ஒதுக்கீடு எங்களுக்கு என்ன செய்திருக்கின்றது? செய்யப் போகின்றது என்பதனை இந்த சமயத்தில் நான் உங்களுடன் பேசுவதை மகிழ்ச்சியாகக் கருதுகிறேன்.அம்பேட்கார் அவர்கள் சமூக நீதியை பேணும் பொருட்டு ஏற்றத் தாழ்வுகளை   அகற்ற ஒடுக்கப் பட்ட இன மக்களுக்கான வாழ்வியல் நீதியை உருவாக்க இடஒதுக்கீடு முறையை கொண்டு வந்தார். கொண்டு வரும் போதே 50 ஆண்டுகளுக்குப் பிறகு இவை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப் பட வேண்டும் என்ற பரிந்துறையையும் செய்திருந்தார். ஆனால் நடந்தது என்ன? அவர் பரிந்துரைப்படி எதுவும் நடைபெறவில்லை 65 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்தியாவைப் பொருத்தவரை ஒரு இடத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரு இனம் வேரு ஒரு பிரதேசத்தில் வாழ்வியலுக்கு போராடுவதாக அமைந்திருக்கின்றது என்பது உண்மை. பிறப்பின் அடிப்படையிலேயே இன்னமும் சலுகைகள் வழங்கப் பட வேண்டுமா? தேவைகளின் அடிப்படையில்  அவை வழங்கப் படுவது பற்றி பரிசீலனை பண்ணினால் என்ன?
மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த வகையான சமூக, வர்க்க , பொருளாதார மனித சிக்கல்களையும் சேர்த்து கணக்கெடுக்கின்றதா?
தவழுகின்ற பிள்ளை நடக்கக் கற்றபின் அதற்கான ஆனவ விசயங்களை செய்யவேண்டுமே அல்லாது தவழ்ந்தால்தான் சலுகைகள் கிடைக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடக் கூடாது.
இன்றைக்கான அரசியல் சாதிய ஓட்டு வங்கி அடிபடையிலானது என்றான பின் எல்லா இன தலைவர்களும் எங்கள் இனம் பிற்படுத்தப் பட்ட நிலையில் இருக்கின்றது என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் ஆனால் 1920 களில் ஒவ்வொரு ஒடுக்கப் பட்ட இனத் தலைவர்களும் எங்கள் இனமும் தாழ்த்தப் பட்ட இனமில்லை என்று சொல்ல முன்வந்தார்கள். ஆனால் இந்த தலைவர்கள் நிஜமாகவே தவழும் நிலையில் உள்ள சமூகம் நடப்பதற்கு எப்படி என்பதை சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதற்கு  ஒரு துவக்கப்புள்ளியை இந்த கருத்தரங்கில் வலியுறுத்த விரும்புகின்றேன்
. நீங்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சாதிய ஒடுக்குமுறை குறித்தும் சாதி அடிப்படையில் எங்களுக்கு இட ஒதுக்கீடு மற்றும் அரசு சலுகைகள்  அளிக்கப்படுகிறது என்று சொன்னால் கேட்பவர்கள் சிரிப்பர். ஏனென்றால்  ஒருவன் இந்த இனத்தில் பிறந்தேன் என்பதற்காக சலுகையை வாங்கக்கூடாது. நான் சலுகை பெறுவதற்குத்தகுதி உடையவனாக இருக்கிறேனா என்பதுதான் முக்கியம். இன்று தமிழகத்தில் என்ன மாதிரியான செயல்பாடு  இருக்கின்றது என்று நாம் நினைத்து பார்த்தோமானால்   1998க்குப் பிறகே சரியான முறையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்பட வில்லை. மக்கள் தொகைக் கண்க்கெடுப்பு எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் எடுக்கப்பட வேண்டிய விசயம் அன்று. மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இந்த சமுதாயத்தில் யார் யார் இருக்கிறார்கள் அம்மக்களுக்கு என்ன தேவை எந்த இன மக்கள் கஷ்டப்படுகிறார்கள் எந்த மக்களுக்கு வாழ்வதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகின்றது என்பதை அறிதல். இதுவரை படிக்காத குடும்பத்தில் பிறந்த ஒரு மனிதன் முதன் முதலில் பட்டம் பெறும் பொழுது அவனது சூழ்நிலை என்னவாக இருக்கும், படித்து வளருகின்ற குடும்பத்தில் பிறந்த குழந்தைகள என்னவாக இருக்கிறார்கள்  இவ்வாறான பல்வேறு விசயங்களை உள்ளடக்கியதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அமைகின்ற பொழுதுதான்   அதனை அடிப்படையாகக் கொண்டு அதன்பின் மக்கள் நலத்திட்டங்களை உருவாக்க முடியும்.
. தொகைக் கணக்கெடுப்பினை எடுக்கும் பொழுதே இந்த விஷயங்களை தெளிவாக எடுத்தால் இது ஒரு அடையாளத்தினைக் காண்பிக்கும். ஒரு இடத்தில் ஒரு தொகுதியில் இத்தனை மக்கள் இருக்கின்றனர். அவர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக இருக்கின்றார்கள். கஷ்டப்படுபவர்களாக இருக்கின்றனர் இவர்களுக்கு இந்த சலுகை தேவைப்படும்.. இதுவே இக்கருத்தரங்கின் முக்கிய நோக்கம். இட ஒதுக்கீடு என்பது இடம் இருப்பதனால் கொடுப்பது அன்று யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு போய்ச் சேர வேண்டும். மருத்துவகாப்பீட்டு என்பது யாருக்காக கொடுக்கப்பட்டது என்றால் யாருக்கு மருத்துவவசதி தேவைப்படுகிறதோ யாரால் சுயமாக மருத்துவம் செய்து கொள்ள முடியாதோ அவர்களுக்கு அரசால் வழங்கப்படுவது. அரசு பணம் என்றால் அது நம் வரிப்பணம் தான் அரசு என்றால் அது நாம்தான். நம்முடைய வரிப்பணம்தான்.
மக்களின் வரிப்பணம்தான் அரசாங்கத் திட்டங்களாக மாறுகின்றன. அந்த  திட்டத்தினை வாங்குபவன் நிஜமாகவே அந்த திட்டத்திற்கு தகுதியுடையவனாக இருக்கின்றானா ன்ற கேள்வி எல்லார் மத்தியிலும் எழத் தொடங்கியுள்ளது. நான் உதாரணத்திற்குக்  மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைக் கூறினேன். பள்ளி, கல்லூரி, வேலைவாய்ப்பு மற்றும் வேறுவகையான  நிறுவனங்களின் ஒதுக்கீடு  வெறும் ஜாதி அடிப்படையில் மட்டும் முன்னிறுத்தப்படுமானால் தகுதி இல்லாதவனுக்கு ஒரு இடம் கொடுக்கப்படுமானால் அந்த இடத்தில் என்ன நடக்கும், ஒரு வேலை செய்து மதிப்பு பெற முடியாத குழந்தை குடும்பத்தில் அனைவரும் தன்னைப் பார்க்க அழுது புலம்பும் அதைப்போலவே தகுதி இல்லாதவனுக்கு அளிக்கப்படும் பதவி ஊழலுக்கான இடத்தை, திறமையின்மையை மறைக்கின்ற  ஊழலை உருவாக்கி தேவையற்ற எந்த ஒரு பயனும் இல்லாததாக மாறிவிடும்.  இட ஒதுக்கீடு என்ற விசயத்தை யாருக்குத் தேவை என்று தீர்மானிப்பவர் யார்? தீர்மானிக்கின்ற  இடத்தை உருவாக்குவதற்கு என்ன வேலைப்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன இது நாம் முன் வைக்க வேண்டிய கேள்வி. இதைக் கூறியவுடன் ஒருவர் கேட்டார் இட ஒதுக்கீடே வேண்டாம் என்று நீங்கள் சொல்லிவிட்டால் காலியாகப் போவது உயர்வான வர்க்கமோ தாழ்வான வர்க்கமோ அல்ல இதற்கு இடையில் இருக்கும் மக்கள்தான். எனவே இதனை முற்றும் முடிவாக தூக்கிவிட முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ஒரு நாளும் செய்ய முடியாது என்பதே எனது கருத்தாகும். எந்த இடத்திலேயும் எல்லாரும்  ஒரே மாதிரியாக சமமாக இருப்பது இல்லை. நான் நினைக்கின்ற வேலையும் வீரமணி அவர்கள் செய்ய நினைக்கும் வேலையும் ஒரே விதங்களில் நடைபெறுவது இல்லை.  உதாரணத்திற்கு வீரமணி அவர்கள் இந்த கூட்டத்திற்கு இத்தனை பெண்களை கூப்பிட்டு வந்து சேர்த்துள்ளார். நான் அவ்வாறு கூப்பிட்டு வர முடியுமா? முடியாது அதாவது செயல்பாடுகள் என்பது வேறுபடும். நம் செயல்பாட்டிற்கு  ஏற்ற ஊக்கங்கள் தேவைப்படுகிறது. கல்வி அடிப்படை என்கின்ற போது எந்த சலுகையைச் சொல்லியாவது எல்லா சமுதாயத்திரையும் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் முன் வைக்க வேண்டியுள்ளது. படிப்பினை  எந்த சமுதாயத்தினராக இருந்தாலும்  கற்க வேண்டும். ஆனால் வேலை வாய்ப்பு என்கின்ற போது அது சலுகை அடிப்படையில் என்று இல்லாமல் தகுதி அடிப்படையில் அமைதல் வேண்டும். பொது அடிப்படையில் என்கின்ற போது எல்லாவற்றையும் பொதுவான அடிப்படையில் செய்ய முடியாது 
 அப்படியானால் அவனுக்கான தகுதியைத்தான் முன் நிறுத்த வேண்டும். இத்தகுதியை ஒரே விதத்தில் தருவதற்கு இந்த அரசாங்கம் என்ன செய்கிறது என்ற கேள்வியினை இந்த கருத்தரங்கத்தின் வாயிலாக  முன் வைக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இட ஒதுக்கீடு என்பதை உரக்க  எதிர்த்த  இயக்கம் அல்லது ஒரு இடஒதுக்கீடு என்ற உடன் தன் சுய ஜாதிக்கு எத்தனை ஒதுக்கீடு என்று இல்லாமல் அனைத்து ஜாதியினருக்காகவும் போராடிய ஒரே அமைப்பு நம் நாடார் அமைப்புதான்.  தோள்சீலை போராட்டம் நிகழ்ந்த பொழுது நாடார் பெண்கள் மட்டும் தோள் சீலை அணியக் கூடாது என்பது இல்லை 18 சமூகங்கள் மேல் சீலை அணியக்கூடாது. 18 சமூக பெண்கள் குறுக்காக தோள் சீலை அணியக் கூடாது என்று திருவவனந்தபுர அதிகாரிகள் எதிர்ப்பு அறிவிக்கின்றனர். இதனை எதிர்த்து ஐம்பது ஆண்டு காலம் போராடிய இனம் நம் இனம். அதிலும் பெண்கள்தான் இப்போராட்டத்தினை முன்னிறுத்தி நடத்துகின்றனர். ஒரு பெண் ராணிகள் எல்லாம் மேலாடையை அணிகின்றனர் அது அழகாக இருக்கிறது நாம் ஏன் போடக் கூடாது என நினைத்து ஒரு துண்டினை எடுத்து மேலே போடுகிறாள். அதைப் பார்த்த அக்காவலாளி நீ எப்படி துண்டு போடலாம் வந்து வரி கட்டிவிட்டுச் செல் என்றான். வரியினை வசூலிக்க அவன் வீட்டுக்கு வர அப்பெண்ணின் தந்தை தாய் இருவரும் வரி கொடுக்க முடியாமல் கதறி அழுகின்றனர். அந்த பெண் காவலாளியிடம் சென்று இந்த முலையை மறைக்கக் கூடாது என்றுதானே வரி கேட்கின்றீர்கள் இதோ எனது முலை எனக்கு வேண்டாம் கொண்டு செல்லுங்கள் என்று இலையில் அறுத்துக் கொடுத்தாள்.  இது மிகவும் முக்கியமான நிகழ்வு இதற்கு மேல் ஒரு பெரிய போராட்டத்தை எந்த இனமும் கொண்டிருக்க முடியாது. எந்த இனத்தோட பெண்களும் நடத்தியிருக்க முடியாது. இந்த போராட்டம் 18 இன மக்களின் போராட்டத்திற்கு உரியது. இன்று நாம் இந்த விசயங்களை எல்லாம் மறந்து இருக்கலாம். அப்படியானால் இந்த இட ஒதுக்கீடு கருத்தரங்கம் சுய ஜாதிக்காக, சுய சமுதாயத்திற்காக சலுகைகளை கோருகின்ற ஒரு கருத்தரங்கம் அல்ல.  இளம் சமுதாயத்தினர் ஒதுக்கீடு குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டியிருக்கின்றது அது குறித்த துவக்கப்புள்ளியைத் துவங்கியிருக்கின்றது என்பது மிக முக்கியமான ஒரு செயல்பாடு ஆகும். இச்செயலினை ஆற்றியதற்காக வீரமணி மற்றும் உடனிருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். சங்க உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் பேசியது எனக்கு உற்சாகமாக இருந்தது. இதற்கு அடுத்தபடியாக நாங்கள் என்ன செய்யப் போகிறோம். இந்த இட ஒதுக்கீடானது அனைத்து சமுதாயத்திலும் தகுதி அடிப்படையில் மட்டுமின்றி தகுதியும் ஒரு அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அதுவே ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கும் என்றால் என்ன செய்யலாம். கர்நாடகாவில் ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டினை காலி செய்து விட்டதாக கேள்விப்பட்டேன் அது எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. மக்கள் தொகை அடிப்படையிலான கணக்கெடுப்பை சமூக பொருளாதார சாதிய  பொருளாதார அடிப்படையில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கப் போகிறோம். இந்த காலகட்டத்தில் ஜாதியிலிருந்து வெளியே வரப் பார்க்க வேண்டுமே அல்லாது ஜாதியை காரணமிட்டு ஏற்றத் தாழ்வுகளை வளர விடக் கூடாது. ஒரு ஜாதியினர் மற்றொரு ஜாதியினரை குறைவாக  மதிப்பிடுதலும் தன்னுடைய ஜாதிதான் உயர்வானது என்று நினைப்பதும் பிரச்சனைக்கு அடிப்படை ஆகும். 

ஜாதி பிறப்பினால் மட்டுமல்ல எங்கேயோ அவனுக்கு வாழ்வியல் சூழல் வசதியினைத் தரவில்லை. வாழ்க்கையின் எல்லாவற்றையும் பெற்றுத்தர என்ன செய்ய வேண்டும் என்பதே. அரசாங்கத்தின் வேலை என்ன மக்களுக்குரிய வரிப்பணத்தைக் கொண்டு அவர்களுக்கான அடிப்படை தேவைகளை கல்வி, இருப்பிடம், வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இவற்றை நிறைவேற்றுதல். அப்படி அவர்கள் அந்த பொறுப்பை எப்படி நிறைவேற்றப் போகிறார்கள். என்பதை பேசாமல் இருப்பதை விட பேசத் தொடங்கியிருப்பது நல்ல விசயம் என்று கருதுகிறேன்.  முற்காலத்தில் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை சமுதாயத்தின் வாழ் நிலை மாறும் என்று சொல்வார்கள். முன்பு காலத்தில் இராமநாதபுரம் தஞ்சாவூர் மாதிரி முப்போகமும் நெல் விளையும் என்று சொன்ன வரலாறுகள் இருக்கின்றன. பிறகு இராமநாதபுரத்தினை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று கூறும் சூழ்நிலையும் வந்தது. 60 வருடங்களுக்கு ஒருமுறை காலங்கள் மாறிக் கொண்டு இருந்தது. ஆனால் இன்றைக்கு அவ்வளவு தாமதமாக  இல்லை. நேற்று இருப்பது போல் இன்று இருப்பது இல்லை சூழல் மாறிக் கொண்டு இருக்கிறது. மக்களின் தேவை மாறிக் கொண்டு இருக்கிறது. முன்பு மக்களின் விவசாயம், நெசவு, மண்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற வாழ்வியல் சார்ந்த தொழில்களே இருந்தது இன்று வாழ்வியல் சார்ந்த விசயங்களில் கார் முக்கியமானதாக மாறி விட்டது, செல், கணினி   அனைத்து தேவைகளின் முன் இடத்தை ஆக்கிரமிக்கின்றது. சாப்பிடாமல் நாம் இருந்தால் கூட  இவைகளில்லாமல் நம்மால் இருக்கமுடியவில்லை. அப்படியானால் இதுவே நம் வாழ்வியலைத் தீர்மானிக்கின்றது. இதிலெதை ஒருவன் கைக் கொள்கின்றானோ அவன் அதில் உச்சத்திற்குப் போய்க் கொண்டு இருக்கின்றான். புதியதாக அவன் என்ன செய்துகொண்டு இருக்கின்றான் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கின்றது. முகநூலில் ஒருவன் எழுதியிருந்தார் ஒரு மரத்தில் மாம்பழம் அதிகம் காய்த்திருந்தது நான் 7 சாக்குகள் கட்டிக் கொண்டு போனேன் கிலோ 2 ரூபாய்க்கு வாங்கிக்கவில்லை வைத்துவிட்டுப் போ வித்து 2 நாட்கள் கழித்து கொண்டு வந்து தருகிறேன் என்றான். ஆனால் அவன் கிலோ 60 ரூபாய்க்கு விற்கின்றான். அப்படியானால் எங்கே  வாழ்வியல் தேவை எவனொருவன் கஷ்டப்படுகின்றான் யார் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இதை எல்லாம் கணக்கில் எடுத்துவிட்டு அதற்குப் பின் இட ஒதுக்கீடுகளைப் பற்றி பரிசீலனை செய்யலாம். இப்போது ஒரு வீட்டில் வசித்தோமானால் அதனை நாம் தொடர்ந்து சுத்தம் செய்து கொண்டேதான் இருக்கப் போகிறோம். இன்று  சுத்தம் செய்து விட்டேன் இனிமேல் சுத்தம் செய்யத் தேவையில்லை என்று கூறப் போகின்றோமா முடியாது. இன்று சாப்பிட்டு விட்டேன் என்று அடுத்த வேளை சாப்பிடாமல் இருக்கப் போவது இல்லை. அரசாங்கம் 65 வருடங்கள் சும்மா இருந்திருக்கிறது என்பது மிகவும் மோசமான விசயம். அந்த விசயத்தை சுட்டிக் காட்டுவதற்காகத்தான் வீரமணி அவர்கள் இந்த கருத்தரங்கை உருவாக்கி இருக்கின்றார்.  இது தொடர்ந்து பேசுவதற்குரியதாக நீங்கள் இந்த புள்ளியிலிருந்து கொண்டு செல்ல வேண்டும். இதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன நான் என் அனுபவம் சார்ந்த கருத்துக்களை முன் வைத்து இருக்கின்றேன். ஆனால் அனுபவம் இடத்திற்கு இடம் வாழ்வியலுக்கு வாழ்வியல் மாறிக் கொண்டே இருக்கும். அதனால் உங்களுடைய அனுபவம் சார்ந்த விசயங்களுடன் இதை சேர்த்து  செயல்களில் ஈடுபடுங்கள். இன்று ஏற்கனவே இருக்கின்ற அரசியல் வாதிகள் என்னவெல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை தயவு செய்து பார்க்காதீர்கள். படம் காண்பிக்கின்ற வேலையே வேண்டாம். எதை நாங்கள் செய்யப் போகிறோம், இல்லை இதை நாங்கள் தொடங்க அருகதை இருக்கிறதா என்ற  கேள்வியை கேட்காதீர்கள் எங்கே உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கே தொடங்கி விடுங்கள். அப்படியான தொடக்கத்தை துணிச்சலாக தொடங்கியிருக்கும் வீரமணி அவர்களை மறுபடியும் பாராட்டி இந்த சந்தர்ப்பத்தில் மறுபடியும் உங்களோடு எனக்குத் தெரிந்த விசயங்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த உங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.. அதோடு பெண்கள் பலர் இங்கு சமையல் செய்ய வேண்டும், காயப்போட்ட துணியை எடுக்க வேண்டும் என்ற நினைப்போடு அமர்ந்திருப்பது எனக்குத் தெரிகிறது. ஒவ்வொரு பெண்களின் தலையிலும் இரு குடும்பப் பொறுப்பு இருப்பதை நான் அறிவேன். ஆனால் சில சமயங்களில் சில விசயங்களை இழந்துதான் ஆக வேண்டும். தப்பில்லை ஏனென்றால் பெண்கள் சிலநேரங்களில் சில சந்தர்ப்பங்களில் சில விசயங்களை தீர்மானிக்கக்கூடியவர்களாக மாற வேண்டிய தேவை இந்த சமுதாயத்தில் உருவாகியிருக்கிறது. அதையும் உணர்ந்துதான் வீரமணி உங்களை அழைத்து இருக்கின்றார். அமைப்புகளில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன் உறுப்பினர் சேர்த்துக் கொண்டு இருக்கின்றோம் என்று சொன்னார்கள். அதுமட்டுமன்றி இது போன்ற பல கருத்தரங்குகளை அமைத்து பேசுங்கள் உங்களுக்குத் தெரிந்த விசயங்களை எவ்வாறு கொண்டு வரலாம் அதோடு சமுதாயத்தில் நடக்கும் கலவரங்களை எவ்வாறு தடுக்கலாம் என்பதனை சிந்திக்க வேண்டும். இந்த பகுதியில் பல ஜாதிய கலவரங்களும்  உயிரிழப்புகளும் நடக்கின்றன. எந்த பெண்ணிற்கும் எந்த ஒரு உயிரிழப்பையும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு உயிரைக் கொடுக்கக் கூடியவர்கள் அவர்கள். அப்படியானால் இந்த உயிரிழப்பிற்கு என்ன காரணமாக இருக்கும் என்று ஒவ்வொரு பெண்களோடும் சென்று விசயத்தை பேசித் தீர்க்க முடியுமா என்று பாருங்கள். உறுப்பினர் சேர்க்கையில் சேர்ந்து கிளம்புங்கள். நாங்கள் பொது வெளிக்குக் கிளம்புவது.  எத்தகையது என்பதனை நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த புரிதல் வெகு விரைவில் அனைத்து குடும்பத்திற்கும் வரும் காலம்மாறும் என்பதைக் கூறி அனைவருக்கும் வாழ்த்துக்களையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன். 

x

Saturday, June 13, 2015

1.உங்கள் கண்ணுக்கு தெரியாத கண்ணகியிடமிருந்த பேராண்மை![பிப்ரவரி மாத தீராநதியில் வெளியான "கண்ணகியின் இன்னுமொரு முலை மிச்சமுள்ளது எனும் தலைப்பில் வெளீயான கட்டுரைக்கு எதிர் வினை இது.]
அகத்தெழுச்சியின் பின் விளைவாக , நினைவு உள்ளத்தின் தாக்கம் இருப்பது போல் , நினைவிலி  உள்ளத்தின் தாக்கமும் கொண்டு பிரவாகமெடுத்து உடைப்பெடுத்து வருவதே  கவிதை. 70களில் நிகழ்ந்த புதுக்கவிதை சர்ச்சைகளுக்கு பின்பாக  கவிதை இசை வழியாக அன்றி  கவிதை ஓவியக் கலையோடு தொடர்புடையது என்றும் , அதனால் கண் வழியே புகுந்து அறிவு வழி உணர்வுகளை எழுப்புவது என்றாகியிருந்திருக்கிறது. கவிதை வாசிப்பவர்களுக்கு  காட்சி வடிவமாவது அப்படியிருக்க இன்றைக்கு நவீன தமிழ் கவிதைகள் ( அந்த அந்த காலத்திற்கு அது அது நவீனமே) என்று சொல்லப்பட்டுக் கொண்டிருகின்ற கவிதைகள் பொதுவாக  எதைக் காட்சிப்படுத்துகின்றன. இது பெண் மொழி, உடல் மொழி என்று ஒரு சாராரை மட்டும் சுட்டு விரல் நீட்டும் விசயமன்று மாறாக இன்று ஆண் பெண் பேதமின்றி ஒரு குழுவினரிடையே  நிகழ்ந்து விட்டுருக்கின்ற உடலை மையப்படுத்துகின்ற உள்மன வக்கிரங்களை கவிதையாக்குகின்ற தாக்கம்  இன்று கண்டனத்துக்குரியதாய் ஆகியிருக்கின்றது.
                                                                                                                                                                                                                                                                    
அதிர்வுகளுக்காக எழுதுகிறோம் ஆண்களை நிலைகுலையச் செய்ய வேண்டியது அதிர்வுகளின் நோக்கம் என்று சொல்லிக்  கொண்டிருந்தவர்கள் அந்த அதிர்வுகள் விட்டெறிந்த பந்தாய் திரும்பி அடிக்கவும் இன்று கவிதைகளில் வரும் அந்த சொல் அதுவே அல்ல என்று சப்பைகட்டுகட்டத் துவங்கியிருக்கிறார்கள். போகவும் இலக்கியம் கடல். கரையில் நிற்கும் உங்களுக்கு வேண்டுமானால் இது அதிர்வாக இருக்கலாம். கடல் இது போல் எத்தனை அதிர்வுகளை அமைதியாக மூழ்கடித்திருக்கிறது. அந்த சொல் பெண்ணுடைய உறுப்பா? கவிதைக்குள் கட்டமையும் உருவகமா? என்று கேள்விகள் எழுப்புகிறார்கள். பெண் எழுத்து , பேசும் அரசியல் அறத்தை(?) உள்ளடக்கிய உருவகம் என்கிறார்கள். ஆணாதிக்க சிந்தனை வழிவந்தவர்கள் தான் (இது ஆணாகத்தான் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை) பெண்ணுறுப்பை வசைச் சொல்லாகவும் , பெண்ணை உறுப்பாக மட்டுமே பார்த்தனர் என்றால் அதைக் கட்டுடைத்து பெண் என்றால் உடல் மட்டும் அல்ல என்று கட்டமைப்பதை விட்டு, நாங்கள் பேசும் அரசியல் அறத்தை(?) உரைக்கக் கையாளும் உருவகத்திற்கு இந்த பிரபஞ்சத்தில் வேறு பொருளே இல்லையா? இல்லை இன்றைய உடல் மொழி பேசும் கவிஞர்களுக்கு ( இதில் சில ஆண் கவிஞர்களும் அடக்கம்) மொழிப் பஞ்சம் ஏற்பட்டு விட்டதா? காட்சி வடிவமாக்கி வாசித்து கொண்டிருக்கின்ற வாசகனுக்கு வீட்டை பெண்ணாகவும் வாசலை பெண்ணுறுப்பாகவும் கற்பனை பண்ண செய்து தருவது சரியானதாய் இருக்குமா?
 
சமுதாய மாற்றத்திற்கான வழிவகையை இது எங்காவது செய்து தருமா? நிச்சயமாக தரப்போவதில்லை. மாறாக  ஆணும் பெண்ணுமாக இவ்வளவு காலம் பெண் என்பள் உடல் மட்டுமல்ல அவளுக்குள் இருக்கின்ற உரிமை மனிதனுக்கான உரிமை என்று நிலைநாட்ட  போராடி நகர்த்திக் கொண்டு வந்தவற்றை எல்லாம் சரித்து தள்ளி விடும். தொகுப்புக்கு தலைப்பிட்டு விடுவதாலேயே தமிழ் கூறும் நல்லுலகத்து பெண்டிர் எல்லாம் தளையறுத்து சுபிட்சம் பெற்றிடக் கூடிய சமுதாய மாற்றத்தை விளைவித்து விட்டார்களா என்ன? அம்மணமாய் திரிகின்ற ஊரில் கோவணம் கட்டியவன் கோமாளி அப்படியிருக்க ஆடைகட்டிய ஊரில் நீங்கள் கவிதைகளை ஆடை அவிழ்க்கச் செய்வது முறைதானா?
 
திரைப்படங்கள் வெறும் பொழுது  போக்கு அம்சம் மட்டுமே. இலக்கியத்தை நீங்களே ஏன் அதோடு ஒப்பிட்டுக் கொள்ள வேண்டும். இலக்கியத்திற்கென்று ஒரு பொறுப்புணர்வு உள்ளது .இலக்கியம் சமுதாய வரலாற்றுக்குரிய புற அமைப்பை அளிக்க இயலும். இது ரெனிவெல்லக்கின் கருத்து.. இதை உணர்ந்து பொறுப்புணர்வோடு இலக்கியம் பயணிக்க வேண்டும். வெகுஜன ஊடகங்களில் சினிமா பாட்டெழுதுபவர்களும் கவியரங்க பிரபலங்களும் விமரிசனத்தை முன் வைக்க முடியாது என்று எப்படிக் கூற முடியும். கவிதைக்கும் இவர்களுக்கும் சம்பந்தம் இல்லையெனும் பதில் வேறு.
அப்போ கவிதை எழுதுகிறவர்களுக்காகவும் சிறு பத்திரிக்கை வாசகனுக்குமாகவே உங்கள் கவிதை என்றால் அது ஏன் அச்சிட்டு புத்தமாக்குகிறீர்கள்? எப்பொழுது உங்கள் எழுத்து கை பிரதியிலிருந்து அச்சாகி வாசகனுக்கென வந்து புத்தகமாகி விடுகிறதோ அப்பவே அதை விமரிசிக்கிற உரிமை எல்லா வாசகனுக்கும் பொதுவாகி விடுகிறதே.
சரியான விமரிசகர்களும், விமரிசனங்களும் இல்லாமல்தான் இன்று  இலக்கியம்  மேல்தட்டு மனோபாவத்தின் வெளிபாடாக அடையாளமாக அலங்காரமாக மாறி வருகின்றது.
இதில் பெண் கவிஞர்கள் இப்போதான் எழுத வந்திருக்கிறார்கள் . அதனால் விமரிசனம் செய்யக் கூடாது என்று விவாதம் வேறு. பெண் என்கிற உடல் சார்ந்த அடையாளத்தை தொலைப்பதே பெண்ணுக்கான விடுதலையாக இருக்கும். விடுதலை பேசும் கவிஞர்களும் அந்த அடையாளத்தை தாங்கி நிற்பது சரியல்ல. நீங்கள் எழுதாத ஆபாசத்தை எப்படி உங்கள் கவிதைகளில் ஏற்றி, ஆபாச வக்கிரமென அவதூறு செய்ய இயலும். உதாரணமாக பாரதியின் எந்த கவிதை வரிகளின் மேலாவது ஆபாச வக்கிரமென அவதூறு செய்ய இயலுமாகவிதைகளில் இல்லாததை எப்படி ஏற்ற முடியும்?
நெருப்பு உருமாறி அருட் பெரும் சோதியாகி நின்ற உருவகமே உங்கள் கவிதைகளில் வரும் சொல்லாடல் என்று பொத்தாம் பொதுவாக  நீங்கள் சொல்லி விட்டு போவது இலக்கியப் புரட்டு என்று நாங்களும் சொல்லி விட ஏதுவாகி விடும் . அதை ஆதார பூர்வமாக நிரூபணம் செய்வது அவசியம். செய்யாமல் சாக்தேய மரபில் வந்த கவி நானென்று நீங்களே சொல்வதும் கேலிக் குரியதே.  எதையும்  தனக்கு சாதகமாக அதே சமயம் முரணானவற்றை கூறும் தன்மையும், தனக்கு தெரியாத விசயங்களை முற்றும் உணர்ந்தது போல் பேசும் ஆதிக்க மனோ பாவமும்   இவர் கட்டுரையெங்கும் நிறைந்திருக்கிறது. தேவாரத்தில் வரும் சிவனை பற்றி பேசும் முன் அல்லது சாக்தேய  மரபில் வந்தவராக கூறும் முன் சைவத்தை பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். அவரது கவிதைகளில் அவர் உருவகப்படுத்தும் சொல்லாடலை சாக்தேயத்தின் குறியீடாக பாவிக்கும் இவர் பக்தி இலக்கியத்தில் என்னத்தை சாதித்து விட்டார். கலாச்சார பேரழிவு ஆயுதங்களை வைத்திருக்கும் உடல் மொழி பேசும் கவிஞர்கள் முன் பாவம் உயிரை மட்டும் வாங்கும் இரசாயன ஆயுதங்கள் எம்மாத்திரம். ஆங்கிலப் படத்தை மொழியாக்கம் செய்தது போல் இருக்கிறது இவரின் திருவெம்பாவை விளக்கம். ஆண்களால் இயற்றப்பட சைவ மரபை பேசும் பாடல்களை  சாக்தேய மரபுக்கு எப்படி துணைக்கிழுக்க முடியும். மற்றவர்களை மத அடிப்படை வாத கவிஞர்கள் என அடையாளம் காட்டும் இவர் எதன் அடிப்படையில் தன்னை மட்டும் சாக்தேய மரபுக் கவி எனும் மத(ரபு) போர்வைக்குள் மறைத்துக் கொள்ளுகிறார். கள்ளுண்ட  குரங்கு கண்ணுக்கெட்டியதையெல்லாம் தூக்கி எறிவதை போலவே உள்ளது இவரது தன் கவிதை குறித்த விவாதங்களும் வீண் தம்பட்டங்களும். அதீதப் புனைவியல் மூலம் உலக நடப்பியலிலிருந்து தப்பித்தலைத்தான்  இன்றைய உடல் மொழி பேசும் கவிதைகள் செய்து கொண்டிருக்கின்றன. சி. கனகசபாபதி குறிப்பிடுவார்  “உத்திகளையே பெரிசுபடுத்தி வாழ்வின் எதார்த்தத்தை  நிகழும் நிமிசத்தில் துடிக்கும் வாழ்வின் சத்தியத்தை மறந்தோ துறந்தோ கலையுருவம் ஆக்குவது நல்லதல்ல. உத்திக் காரர்கள் சித்து விலையாட்டுக்கள் செய்தால் அத்துமீறி அழிவு வினையாக முடியும்... இதை ஒவ்வொரு படைப்பாளியும் உணர வேண்டும். தமிழ் இலக்கிய மரபும், பிற இந்திய இலக்கிய மரபும், உலக இலக்கிய மரபும் வாசித்து கற்றவர்கள் அல்லது கற்றதாக சொல்லிக் கொண்டிருப்பவர்கள் நிகழ் வாழ்க்கையும் வாசிக்கக் கற்றால்    இன்றைய வாழ்வின் சத்தியத்தை உணர்வார்கள். இலக்கியம் வாழ்வோடு பயணப்பட வேண்டுமே அல்லாது . இலக்கியத்திற்காக வாழ்வு என் மாற்றுதல் சரியாய் இருக்காது.

ஔவையார் காமத்தைப் பேசினார் சரி. நீங்கள் குறிப்பிட்ட பாடல் எத்தனை பேருக்கு போய்ச் சேர்ந்தது  இதுவே சாட்சியல்லவா? எதை பேசுகின்ற  கவிதைகள் காலம் தாண்டி மக்களால் பேசப் பட்டு நிற்கின்றன என்பதற்கு . இருபத்தோராம் நூற்றாண்டுக்கு போவது பற்றி எல்லாரும் பேசிக் கொண்டிருக்க, நாம் ஏன் பின்னோக்கி பயணிக்க வேண்டும் என்ற கேள்வியும் எனக்குண்டு. எத்தனையோ ஔவையார்கள் எண்ணிக்கை அறிதியிட்டு கூற முடியாத நிலையில் இருக்க இவர் எந்த ஔவையாரை தன் தரப்பு அநியாயங்களுக்கு சாட்சிக்கு அழைக்கிறார். அந்த அடிப்படையில் நான் கூறுவது இதுதான்அவநம்பிக்கைகளின் மேல் பயணிப்பதை  விட்டு வாழ்க்கையை நம்பிக்கையின் மேல் பயணிக்க விடுங்கள்பெண் கவிகள் பாலியல் உணர்வுகளை வெளிப்படையாக எழுதுகிறார்களே  இந்த கேள்விகள் மாற வேண்டுமானால்  பெண் என்பவளை உடல் உறுப்பாக அடையாளைப்படுத்தும் ஆணாதிக்க பாசிசக் குரலுக்குள்ளிருந்து ஆண்கள் மட்டுமல்ல , பெண்களும் வெளிவர வேண்டும். 

Sunday, June 7, 2015

உணர்வலைகள்

போதித்துக் கொண்டேயிருந்தாய்
உன் புத்திசாலித் தனங்களை
அதை நிரூபிப்பதற்கு சாட்சிக் கூண்டில்
எப்பவும் எதிராளிகளுக்கு
முட்டாள்கிரீடங்களை சூட்டியவாறே நீ

புத்திசாலித் தனங்கள்
மண்ணாக இருந்து
 உறிஞ்சிக் கொள்ளப் படுபவை அல்ல
சம்பவங்களூடாக நிகழ்த்தப் படுபவை
அது உன்னது போல்தானிருக்கும்  என்று
நம்பும் உன் பேதமையை
சொல்லிச் செல்கின்றபோது
அறுத்துக் கொள்கின்றாய் உணர்விலைகளை


Monday, June 1, 2015

நவீன இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்

நவீன இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள்
       எழுத்து என்னோடு தொடர்ந்து இருந்து கொண்டிருந்தாலும், இலக்கிய அரசியல், இலக்கிய வாசிப்பு, இலக்கியவாதிகளூடான தொடர்பு 1998ற்கு பிறகுதான் எனக்கு ஏற்படுகின்றது. அதுவும் கணினி, லட்சுமிஅம்மாள் ஊடாக, பின்னால் பாரதி இலக்கிய சங்கத்தின் வழியாக.
       என்னைப் பொறுத்தவரை நவீன இலக்கியம் 1998க்குப் பிறகாக இன்றுவரை நீளுகின்றது. ஆரம்பத்தில் என் வாழ்வு என் எழுத்து என்று இருந்து வந்த எழுத்து இயங்கியலில் இருந்துதான், இங்கு இயங்கிக் கொண்டிருக்கின்ற இலக்கிய புரிதல் அல்லது வாசிப்பு எனக்குள் ஒப்பீடு ரீதியாக நிகழ்கின்றது.
       அதன் அடிப்படையில்தான் இலக்கியத்தில் பெண் படைப்பாளிகள் குறித்த என் கருத்தாடல்களை பதிவு செய்கின்றேன்.
1.   பெண் படைப்பாளிகளின் அடிப்படை இயக்கம் எப்படி இருந்தது அல்லது இருக்கின்றது.
2.   இன்றைய இலக்கிய  விமரிசன உலகம் அதை எப்படி எதிர் கொள்கிறது.
இந்த இரண்டும் ஒன்றை ஒன்று நகட்டுகின்ற பாதிக்கின்ற விசயமாகவே இருந்து வருகின்றது.
பெண் படைப்பாளிகளின் அடிப்படை அவர்கள் வாழுகின்ற வாழ நேர்ந்து விடுகின்ற வாழ்வியலின் வேர்களிலிருந்து கிளைத்து வருகின்றது.
சிலரது வாழ்க்கை பெண்ணிய, கலை இலக்கியம் ஊடாகவும், பெரும்பாலானோர் வாழ்க்கை அன்றாட யதார்த்த போராட்டங்களிலிருந்தும் கிளம்பி வருகின்றது.
பெண்ணிய கலை இலக்கிய செயற்பாடுகள் மூலமாக கிளம்பி வருகின்ற எழுத்துக்கள் தங்களுக்கு சாட்சியங்களாக சில பல முன்னுதாரணங்களை கொண்டிருக்கின்றன.
அதைப் போலச் செய்ய நினைத்து இடத்திற்கு பொருந்தாமற் போனதும் உண்டு.
அதிலிருந்து தொடங்கிய வேறொன்றாய் முடிந்ததும் உண்டு.
தமிழக சூழலில் புதிய வகைமைகளாக கொடி பிடிக்கப்பட்ட போதும் பல பிரதேசங்களில், அல்லது தேசங்களில் பயன்படுத்தப்பட்டவையாகவே அவை இருந்தன. தமிழக சூழல் தாண்டிய பெண் ஆளுமைகளை சந்திக்கின்ற போது, பயன்படுத்தப்பட்டு நிராகரிக்கப்படவையாகவும் சில நேரங்களில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. தெலுங்கு பெண் எழுத்தாளர் சுபத்ரா  ஒரு சந்திப்பில் காமத்தை எழுதுபவர்களுக்கு, வயிற்றுப் பசி பத்திய அறிமுகம் இல்லை என்று சொல்லி ஆதங்கப்படுகின்றார்.
கோட்பாடு அடிப்படையிலான பரீட்சார்த்த எழுத்துக்கள் ஒட்டு மொத்த கவன ஈர்ப்பு என்றும் இதுவரை இல்லாத வகைமையென்றும், உலக இலக்கியங்களோடு ஒப்புமை தரம் மிக்கவையாகவும் சொல்லப்படுவதற்கு வசதியானதாக மாறி விடுகின்றன.
பெண் படைப்பாளிகள் பல்வேறு பாடு பொருள்களை கவிதை, கலைப்படைப்பாக்கிவிட்ட போதும்,  “காமத்துப்பால் கவிஞர்கள்” என்று ஊடக வெளிச்சத்தைப் போட்டு, அங்கீகாரம் கொடுப்பதைப் போன்று நடித்து ஒரு வழிப் பாதைக்குள் மீண்டும் பெண் தன்னையே உடல்  மட்டுமானவளாக பார்த்துக் கொள்ள வைக்கின்ற அபத்தத்தை செய்து விட்டன.
கோட்பாடு ரீதியான ஆண்குறி மையப்புனைவு எதிர்ப்பு மட்டுமானதாக நவீன தமிழ் சில பெண் படைப்பாளிகளின் படைப்புகள் மாறிப் போயிருந்த அவலமும் நிகழ்ந்து கொண்டேதான் இருந்தது.
       அதைத் தொடர்ந்து கோட்பாடுகள் ரீதியான படைப்புகள் ஒரு தேக்க நிலையை அடைந்ததை விமரிசர்கள் மட்டுமல்லாது படைப்பாளிகளும் உணர்ந்தபடியேதான் இருந்தனர். இன்னொரு வகைமை தமிழகச் சூழலில் கோட்பாடுகள் கருதியல்கள் ஏதுமறியாது தனது அடிப்படை வாழ்வு எதுவென்றே புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு ஏற்படுகின்ற உணர்வுச் சிதைவுகள், உணரப்படாமலேயே இருந்து கொண்டிருக்கின்றன. உணர்வுச் சிதைவுகளைப் பல நேரங்களில் உணரப்படாமல் இருப்பதனால் அடையாளம் காணப்பபடாமல் பேசப்படா பொருளாகவும், அப்படி வாழ்வியலில் இருந்து பேசுகின்ற படைப்பாளிகள் பெண்குரலாக  வாசிப்பு இல்லாமல், சமுதாய குரலாக ஏன் “ஆண் குரல் என்ற குற்றச்சாட்டோடு” மட்டுமே வாசிப்பும் நிகழ்த்தப்பட்டு விடுகின்றன.
கோட்பாடுகளையும், மேலை தேயத்து பெண்ணிய குரல்களையும் புது பெண் மொழியாக ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கின்ற இலக்கிய விமரிசன உலகம் மரபிலிருந்து, மண்ணிலிருந்து கொண்டு கேள்வி எழுப்பும் குரல்களை அலட்சியமாக புறந்தள்ளி விடுகின்றன. அதில் திட்டமிட்ட புறக்கணிப்பும் சேர்ந்தேதானிருக்கின்றன.
கோட்பாடுகளையும், மேலை தேயத்து பெண்ணிய குரல்களையும் புது பெண் மொழியாக ஒப்புக்கொள்ளத் தயாராக இருக்கின்ற பெண் படைப்பாளிகளும், தங்களுக்கு எதிரான தளத்திலிருந்து (உணர்வுச் சிதைவுகளை பேசும் பெண்மொழி தளத்திலிருக்கும், அவற்றை தனக்கு பரிச்சியமான மொழியில் எழுதிக் கொண்டு போவது என்பது) வார்த்தைகளின் அரசியல் அல்லாமல் வாழ்வின் அரசியலை பேசுபவர்களிடமிருந்து வரும் எப்படைப்புக்களையும் அவற்றிற்கான பொதுத்தன்மைகளையும் உரத்துப் பேசுவதே இல்லை. தங்களுடைய போக்குகள் மட்டுமே தமிழகத்தில் இயங்குவதாக எங்கெங்கும் பேசியும், பதிவேற்றியும் வந்தனர். நிராகரிப்பதாக பேசுவதற்கு கூட அருகதை அற்றவையாக அவை புறந்தள்ளப்பட்டன.
இந்த காலகட்டத்தில் பெண் எழுத்துக்களை தனது வியாபாரப் பொருளாக பத்திரிக்கை  வட்டாரங்கள் மாற்றிக் கொண்டன.
“கொஞ்சம் போர்னோவாக எழுதித் தர முடியுமா” எனக் கேட்ட  இலக்கியப் பத்திரிக்கைத் தாதாக்களும் பெண் மொழி எழுதினால் புத்தகம் போடுகின்றேன் என கேட்கும் மிகச் சாதாரண பதிப்பகங்களும் பெண் படைப்பாளிகளிடம் கோரிக்கைகள் விடுத்தது இதற்குச் சான்று.
 தன் உடல் பொருளாவதை எதிர்த்து எழுதத் தொடங்கப்பட்ட கவிதைகளை பொருளாக மாற்றிக் கொண்டது பத்திரிக்கை வியாபாரம்.
இலக்கிய விமரிசன உலகம் இதை எப்படி எதிர் கொண்டது.
பெண்கள் எழுதத் தொடங்குகின்ற போதே ஆண் படைப்பாளிகளிடமிருந்தும், விமரிசகளிடமிருந்தும் உன் படைப்பு எதைப் பேசினால் பார்க்கப்படலாம் எனப் பாடம் நடத்தத் தொடங்கியிருக்கின்றனர்.
எதைப் பாடு பொருளாக எழுதுவது
கவிதையில்  எடிட்டிங்
எழுதப்பட்ட கவிதைகள், இலக்கிய விமரிசகர்களின் வாசிப்புக்குள் தினித்து வடிவமைத்து விடுவது என்பதாக அவை நீண்டது.
பாலியல் சுதந்திரம் பேசும் பெண்களுக்கு ஆதரவானவர்கள் நாங்கள் என்று சொல்லும் போது, அச்சுதந்திரத்தில் நாம் குளிர்காயலாமா என்று தோளில் கை போட்டவர்கள் எங்களிடயே ஆகச் சிறந்த படைபாளிகளாகவும், விமரிசகர்களாகவும் இருந்தவர்கள்தான். இவர்கள் பாலியல் தெரிவில் சுதந்திரம்  என்பதை பெண்கள் உணர்ந்து விடக் கூடாது என கவனமாக செயல்பட்டவர்கள்.
நானும் பெண்ணிய எழுத்துக்களை எழுதுகின்றேன். உடல் மொழி கவிதைகள் நாங்களும் எழுதுவோம் என்று கிளம்பியவர்களில் எழுத்தில் கருத்தியலில், வாழ்வு, கவிதை இரண்டுமே அபத்தப் புரிதலாக மாறிப் போயிருந்தது.
ஒரு மேடையில் பெண்கள் எழுத்து அதிர்வை மட்டும் நோக்கியதாகவும் விளம்பரத் தனத்தோடும் இருக்கின்றது என எதிர்த்தவர்களும் கோட்பாடு எழுத்துக்களுக்கு எதிர்திசை எழுத்துக்களை ஆதரித்தவர்களாய் இருக்கவில்லை.
ஒரு பக்கம் பெண் எழுத்து வேகமாகப் பார்க்கப்பட்டு விடுவதற்கான தேவை  இருந்ததை  அதன் மேல் கல்லெறிவதற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டதோ இலக்கிய விமரிசன உலகம் என கேள்வி கேட்க வைத்தது.
தொடர்ந்து எழுதுகின்றவர்களை, தங்களது விமரிசன தராசில் நிற்க தகுதியற்ற புலம்பல்களாக புறந்தள்ளுவதும் நிகழ்ந்தபடி இருந்தது.
பல விமர்சகர்களிடம் இருந்த மௌன அங்கீகாரங்களும் நிராகரித்த எழுத்துக்களின் மேலான உரத்த கூச்சல்களும் உண்மையான எழுத்துக்களும் புதிய பெண் குரல்களுக்கும் சவக்குழி தோன்றிய வண்ணமே இன்றும் இருக்கின்றன.
இதில் தாக்குப் பிடிக்க முடியாமல் காணாமல் போனவர்கள், காணாமல் போனாதாக பிரகடனப்பட்ட எழுத்துக்கள் அதிகம்.
ஏற்கனவே இருந்து கொண்டிருந்த இலக்கிய  அளவீடுகள், பெண் எழுத்துக்கும், அவள் பேசுகின்ற வாழ்வியலுக்கும் கோருகின்ற புதிய பார்வைகளுக்கும் பொருத்தமற்றவைகள்.
இதற்கிடையில் பெண்களின் விமரிசனங்கள் ஒட்டு மொத்த இலக்கிய படைப்பின் மேல் எப்படியாக இருந்து வருகின்றது.
பெண்களுக்கான இலக்கியத்தில் அவள் வாழ்வு சவாலாகிப் போனதிலிருந்து எழுதத் தொடங்கும் எழுத்துக்கள் வாழ்வை விட பெரிய சவாலை அரசியலை எதிர் கொள்ள வைக்கின்றன. அவள் எழுதுவதற்கான நேரமும் அவள் எழுதுவதற்கான அரசியலில் அவளே பிரகடனப்படுத்த வேண்டிய தேவையும் அவள் வாசிப்புத் தளத்தை, அது குறித்த விமரிசனத்தை பதிவு செய்யும் நேரத்தை எண்ணத்தை தின்றே விடுகின்றன எனலாம்.
பெண் விமரிசனம், எதை அவன் வார்த்தையில் சொன்னால் ஒப்புக் கொள்வானோ அப்படி அவன் பாணியில் இறங்கி அவனை ஒத்துக் கொள்ள வைப்பது ஒரு விமரிசன வெற்றி என்றால் என் ரசனை, என் விமரிசனம் எதுவென்று உனக்குப் புரியவைப்பேன்.  உன் எடைக்கற்களை நிராகரித்து புதிய அளவுகோள்கள் என்னிடமிருந்தும் வரலாம் என்பதான பகிரல்களையும் ஒரு விமரிசன வெற்றியாகவே பார்க்கின்றேன்.
ஆனால் இவையெல்லாம் ஒரு முழுப்பக்கத்தில் உள்ள ஒரே ஒரு  புள்ளி அளவினதாகவே இருப்பதால் கடந்து போய்க்கொண்டிருக்கின்றன.
எழுத்தே வாழ்வு
எழுத்தே கருத்தியல்
எழுத்தே விமரிசனம்
எழுத்தே இச்சமூக சிந்தனை கட்டமைப்பு
எழுத்தே இச்சமூக  எதிர்ப்பு
அப்படியான சிந்தனைக் கட்டமைப்பே என் நவீன கலை வடிவம் என்பதாக நவீன தமிழ் இலக்கியத்தில் விளைவும், எதிர்விளைவுமாக பெண் எழுத்துக்கள் பயணிக்கின்றன.
அவற்றின் தடங்களை நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் கடந்துதான் போக வேண்டி இருக்கும், அதன் சுவடுகள் காலங் கடந்து அதை சொல்லும் சாட்சியங்களாக உருமாறும்.