Friday, June 26, 2015

பேச மறந்த குறிப்புகள்


                         பேச மறந்த குறிப்புகள்
                                                             திலகபாமா
எனை அடுத்து பெண்கள் படைப்புகள் பற்றி பேச வந்த அபிலாஷ், ரொம்ப சுவாரசியமான பேச்சாக தனது பேச்சை முன் வைத்தார். 5 பெண் கவிஞர்களை முன் வைத்து பேசத் தொடங்கிய அவர் அவர்களை பாராட்டுவதாக தொடங்கிய போதும் ஒவ்வொருவர் கவிதைக்கான கோட்பாடுகள் எவை எவை, யார் யாரை பின்பற்றி எழுதுகின்றார்கள், அவர்களின் பாடுபொருள் என்ன, எனப் பேசத் தொடங்கினார். 
அவருடைய பேச்சின் சாராம்சத்திலிருந்து எனது புரிதலுக்கானவை
 1. அவர் குறிப்பிட்ட  கவிஞர்களின் கவிதைகளும் சில ஆண் கவிஞர்களின் கவிதைகளை ஒட்டியே இருப்பதாக முன் வைத்தது.
 2. ஒரு கவிதையை காண்பித்து இக்கவிதை எத்தனை பேருக்கு புரிகிறது கையை உயர்த்துங்கள் என வகுப்பு நடத்தும் பாணியில் கேள்வி வேறு
கவிதை எனக்கு மட்டுமே புரிகிறது என்ற மேடையில் இருந்து  அபிலாஷ் உரையாடல் தொடங்குகின்றது.
 1. கவிதைக்குள் இருக்கும் உணர்வை சொல்லாமல், கதை இருப்பதாய் இட்டுக் கட்டுவது, சீப்பை பார்த்த பிறகு, இதனால் திருமணம் தடைபட்டிருக்கலாம் என காட்சிப்படுத்த முயலுவதாய் அவரது உரையாடல்கள் இருந்தன.
என் கட்டுரையில் நான் இலக்கிய விமரிசன உலகம் என்ன செய்யும் என்று சொன்னதற்கு சாட்சியமாய் அவரது பேச்சு இருந்தது.
 • தான் நினைத்த ஒன்றை பெண் குரலாக வாசிப்பது
 • தனது அளவீடுகளுக்குள், அல்லது தனது கண்ணாடி வழியாக எல்லாவற்றையும் வாசிப்பது.
 • தனிமனித அடையாளங்களோடு சேர்ந்து படைப்பை வாசிப்பது.
 • கெட்டிக்காரத்தனமாக வேட்டையாடினாள் என்பதாக, பாராட்டுவது போல் அவள் வேட்டையாடியதை போட்டுக் கொடுப்பது.  வேட்டையாடுவது தவறு என்று சொல்ல மாட்டாராம்.
கறை நல்லது, பொய் நல்லது என்பது போன்றவைகள் உங்களை நடுநிலைவாதியாக காண்பிப்பதாக நீங்கள் நம்பினால் நான் பொறுப்பல்ல.
 • நிஜமாகவே புதிய குரல்கள் வருகையில் அதன் மதிப்பை இதற்கு முன்மாதிரிகள் இல்லாததாலேயே  நிராகரிப்பது.
இப்படியான எல்லா குரலுக்கும் சாட்சியமாக அபிலாஷ் உரை இருந்தது.
ஆண்களின் படைப்புகளை பெண்கள் விமரிசனம் செய்யத் தொடங்கினால், இன்னும் பல பார்வைகள் வெளியே வரும். ஆனால் அப்படி விமரிசனம் செய்வதை, ஏற்கனவே எழுதிக் கொண்டிருந்தவர்கள் ஆண்கள் என்ற முறையில் வைக்கப்படும் விமரிசனத்தை, மூத்தோர்களை நிராகரிக்கின்றார்கள் பெண்கள் என்று வாசித்து விடக் கூடிய அபாயமும் முன் எழுதிக் கொண்டிருந்த ஆண்களின் படைப்புகளை ரசித்த விசயத்தை சொல்லும் போது அவர் வழியில் எழுதுகின்றார் என்று மொன்னை வாசிப்பை நிகழ்த்தி விடவும் வாய்ப்பிருக்கின்றது என அபிலாஷ் பேச்சு நிரூபித்தது .
பெண் படைப்புகள் குறித்து பேசுவதற்கு பெண்கள் பகுதியிலிருந்து விமரிசனக் குரல்கள் குறைவு என்பதும், ஆண்கள் விமரிசனத்தின் வழியாகவே இலக்கியம்  வாசிக்க வேண்டியிருப்பதும் தவிர்க்க முடியா காலச் சூழலே.
இரண்டு கேள்விகளை கூட்டத்தினர் என் முன் வைத்தனர். 
 1. தூப்புக்காரி போன்ற  சமூக நாவல்கள் பெண்களால் ஏன் எழுதப்படவில்லை என்பது 
 2. 500 பக்க நாவல்கள் ஏன் பெண்களால் எழுதப்படுவதில்லை.
 • திலகவதியின் கல்மரம்
 • அழகியநாயகி அம்மாளின் கவலை
 • சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை 
போன்று சில நாவல்களை உங்கள்  கேள்விகளுக்கு பதிலாக காண்பிக்க முடியும். ஆனால் பக்கங்கள் மட்டுமே நாவலின் தரமாக கேள்வி இருப்பதை ஒத்துக் கொள்ள முடியாமல் இப்படி ஒரு பட்டியலிடுவதை தவிர்க்கவே நினைக்கின்றேன். நாவலின் தரம், நல்ல நாவலுக்கான இடம் வெறும் 500 பக்கங்களைத் தாண்டுவதில் இல்லை. 500 பக்கங்களைத் தாண்டுபவர்கள் ஒட்டு மொத்தமாக கூட்டிக் குவித்துக் கொண்டு வந்து சேர்ந்திருக்ககும் தகவல்களில், ஏதேனும் ஒன்றையாவது வாசகனும், விமரிசகனும், படைப்பாளியும் ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கும் தருணத்தில் எதிர்மறை விமர்சனத்திலிருந்து தன்னை தப்புவித்துக் கொள்கின்றார்கள்.
ஒரு ப்ளேடு விளம்பரத்தில், அறுத்துவிடும் பயத்தில் சவரம் செய்து கொண்டிருக்கும் தருணத்தில் மனைவி புடவை வாங்க  அனுமதி கேட்டு விடுவது போல் காண்பிப்பார்கள்.
அது பல தலையணை நாவல்களுக்கு பொருந்தக் கூடியதாய் இருந்து விடுகின்றது. நாமே நம் கழுத்தில் கத்தி விட்டு சம்மதம் வாங்கிப் போகின்ற வேலையைத் தான் 500 பக்கங்களுக்கு அதிகமாக இருக்கின்ற நாவல்கள் செய்து விடுகின்றன.
எனவே தரத்தை தீர்மானிக்க, பெண்கள் எதையும் அழுத்தமாக செய்வதில்லை என ஸ்தாபிக்க இந்த கேள்விகள் பயன்படுவதை அனுமதிக்க முடியாது.
தூப்புக்காரி போன்ற “சமூக நாவல்கள்”. இந்த சமூக நாவல்கள், என்ற அடைமொழிக்குள் இந்நாவலை கொண்டு செல்வதன் மூலம், ஏனைய மற்ற பெண்களின் நாவல்கள்  சமூக நாவல்கள் இல்லை என சொல்ல வருகிறீர்களா?அல்லது இன்னாவலில் பெண் அகஉணர்வு இல்லை என்று சொல்ல வருகின்றீர்களா?
எனது நாவலான கழுவேற்றப்பட்ட மீன்கள் நாவலில்
 1. உலகமயமாக்கலின் பாதிப்பில் குடும்பச் சிக்கல்கள் என வாசிப்போரும் உண்டு.
 2. பெண் அகவயப் பிரச்சனைகள் உணர்வு தளத்திலிருந்து பேசப்பட்டிருக்கின்றன என்று சொல்லுவோரும் உண்டு.
உலகமயமாக்களின் பாதிப்பு என்று சொல்வதன் மூலம் பெண் உணர்வு வாசிக்கப்படாமல் நிராகரிக்கப்படுவதை அனுமதிப்பதா?
பெண் அகவுணர்வுச் சிக்கல்களாக வாசிப்பதன் மூலம், உலகளாவிய பிரச்சனைகள் இந்நாவலில்  பேசவில்லை என்பதை அனுமதிப்பதா?
ஆய்வு மாணவர்கள் அடிக்கடி கேட்கின்ற கேள்வி, பெண்கள் பிரச்சனைகளை எழுதும் நீங்கள் எப்பொழுது சமுதாய பிரச்சனைகளை எழுதப் போகிறீர்கள் என்பது?
இக்கேள்வி எவ்வளவு அலட்சியமாக பெண்கள் பிரச்சனைகள் சமுதாயத்தின் பிரச்சனைகள் அல்ல என்று மனரீதியான  பதிவு சமூகத்திடம் இருப்பதை அடையாளம் காட்டி விட்டுப் போகின்றன.
ஏற்கனவே பிரபலமடைந்தவர்களைப் பற்றி மட்டுமே பேசி அந்த வெளிச்சத்தை தன் மேல் போர்த்திக் கொண்ட அபிலாஷிற்கு வாழ்த்துக்கள். அதன் மூலம் ஏனைய கவிஞர்களை இருளில் தள்ளும் வேலையை (காலம் கருதி என்று சொன்னாலும்) அறிந்தே செய்கின்றார். இது நவீன தமிழ் இலக்கிய உலகிற்கு பெண் படைப்பாளிகளுக்கு புதிதில்லை. தான் விரும்புவதை மட்டுமே சொல்வது நடுநிலை அல்ல. எந்த கோட்பாடுகளுக்குள்ளும் , அடைமொழிகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாத பெண் படைப்பாளிகள்  அபிலாஷின் வாசிப்பிலிருந்து விலக்கியிருப்பது இலக்கிய உலகின் முன் தீர்மான அளவு கோலுக்கும் அவரது வாசிப்பு இயலாமைக்கும் சான்றாக இருக்கின்றன,
இருமைத் தன்மைக்குள்ளாக மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது போய் பன்மைத் தன்மைகள் வந்து விட்ட கால கட்டத்தில் உடல்மொழி, உடல்மொழி எதிர்ப்பாளர்கள் என்ற இருமைத் தன்மையை மட்டும் மனதில் வைத்து பேசும் மொன்னையான விமரிசனம் இது. பெண் படைப்புகளின் பன்மைத் தன்மையை நிராகரிக்கும் தனம்.


No comments:

Post a Comment