Saturday, September 26, 2015

வெண்கடல் -விமரிசனம்
எழுத்து ஒரு படைப்பாளி எவ்வளவுதான்  திட்டமிட்டாலும், அதையும் தாண்டி அவன் வாழ்வோடு சேர்ந்து தன்னை எழுதிக் கொள்கின்றது. எழுதுபவனிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றாக அது செயல்படுவதில்லை என்பது என் கருத்து.
     அதில் படைப்பாளியின் மனம், தீர்மானங்கள் எல்லாமும்  செயல்படும் ஒரு தளமாகவே எழுத்து இருந்து வருகின்றது.
     மனிதர்களிடையே நிமிடந்தோறும் எவ்வளவோ சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. வாழ்க்கையே அதன் சேர்க்கைதான். அதன் சேர்க்கை உணர்வின் நூலிழையில் நிகழ்கின்றது. அந்த இரண்டையும் சரியாகச் சொல்லுகின்ற ஒருவன் எழுத்து சிறந்த சிறுகதை ஆகிறது.
     பல நேரங்களில் சம்பவங்கள் மட்டும் பதியப்பட்டு விடுகிறது.
நாவல்கள் தகவல்களால் நிரப்படுகின்ற  ஆபத்து நேர்ந்தது போல வெற்றுச் சம்பவங்களால் நிரப்பி விடுகின்ற சிறுகதைகளின் பெருக்கம் எது நல்ல சிறுகதை என்ற தேர்வுக் குழப்பத்தை தந்து விடுகின்றது.
இந்த வெண்கடல்  தொகுப்பில் படைப்பாளி எழுதிச் சொல்லுகின்ற 11சிறுகதைகளை வைத்துக் கொண்டு எச்சிறுகதைகள் சம்பவங்களிலிருந்து உணர்வுகளில் ஊறி சிறுகதையாகவும், உணர்வில் ஊறாமல் உலர்ந்து சம்பவங்களாகவும் நிற்கிறது என்பதை உதாரணம் காட்ட முடியும். இப்படி எல்லாவற்றுக்குமான உதாரணமாக இருப்பது வெண்கடல் நூலின் சிறப்பாகவே சொல்லலாம்.
பிழை –உணர்வோடான சிறுகதை
தீபம் உலர்ந்து விட்ட சிறுகதை
தனித்து விடப்பட்டவர்கள், அல்லது அவர்களது குரல்களை யாரும் கவனிப்பதில்லை என்ற தாழ்வுணர்ச்சி  கொண்டவர்கள் தங்களின் அன்றாட செயல்களை சிந்தனைகளை, கேட்பவருக்கு தேவையானதா, சந்தர்ப்பத்திற்கு பொருத்தமானதா என்றெல்லாம் யோசிக்காது நிமிட இடைவெளியிடாது நடந்தவற்றை சிந்தித்தவற்றை பேசிக்கொண்டே இருப்பார்கள் இத்தொகுப்பில் சில சிறுகதைகள் தொடர்ந்து வாசிப்பில் கதை இருப்பது போல் தோன்றினாலும் அவை வெறும் சம்பவங்களே, கேட்போருக்கான வாசிப்போருக்கான உணர்வாக மாற முடியாத தனிப்பட்ட சம்பவங்களாகவும் வெற்று உரையாடல்களாகவுமே உள்ளன. இவ்வரிசையில் தீபம், கிடா இவற்றைச் சொல்லிப் போகலாம்.
இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளுமே சமூக வெற்றி, வாழ்வு என்று ஒத்துக் கொள்ளாத விசயங்களை மையமாகக் கொண்டே  அமைந்துள்ளன என்று கூடச் சொல்லலாம். அப்படியென்றால் விளிம்பு நிலை மக்களை பேசுகிறதா நல்ல விசயம் தானே எனக் கேட்கலாம். ஆனால் விளிம்பு நிலையே சாஸ்வதம் என நம்பவைக்கின்ற ஆபத்தை செய்து விடுகின்றன. மையத்தை நோக்கி நகர்வதும் விளிம்பு நிலையோடு கைகோர்ப்பதும் இரண்டும் பெரிய வித்யாசமில்லை என்று உணர வைப்பதான  கலையாக கதைகள் இல்லை.பிழை கதையில் வரும் சரித்திரத்தில்   ஈயாக இருந்தால் போதும் என்பது அப்படியான சிந்தனைத் தளத்திற்கு சான்று.
ஒரு மனிதன் தன் வாழ்நாள் சாதனையாக நினைப்பது அவன் காலத்திலேயே ஏதுமற்ற ஒன்றாக மாறி விடுகின்றது என்பதற்கான சான்றாக குருதி , பிழை சிறுகதைகள் உள்ளது.
தீபம், குருதி இரு சிறுகதைகளும் நிலம் ஒரு ஆணின் வாழ்வில் எத்தனை பெரிய முக்கியத்துவத்தை நிகழ்த்துகிறது என சொல்லிப் போகின்றது.
இத்தொகுப்பில் கதைகளுக்கிடையில் பேசப்படுகின்ற தத்துவ விசாரங்கள், கவிதைத் தனமான காதல் வரிகள், சில அரிய தகவல்கள்.
பக்கம்-192
1)   எல்லாமே நெருப்பு தான் என்று.
ஆமாம்
     உடனே எனக்கு தோன்றியது என்வழி நீரின் வழிதான் என்று.
     இந்த தேசம் நெருப்புக்குண்டமாக ஆக வேண்டாம் இது ஒரு குளிர்ந்த தடாகமாக ஆனால் போதும்.
முட்டாள் தனம். நீருக்குள்ளும் நெருப்புதான் இருக்கிறது அந்த நெருப்பு நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
2)   நமக்கு பிடிச்சிருக்கிறவங்களுக்கு நம்ம மேலே பிரியமிருக்கான்னுதானே நாம பார்ப்போம் குளத்துப் பாசி போல ஒரு துணியைப் பிடித்து எடுத்தால் எல்லாம் சேர்ந்து அசைந்து இழுபட்டு வரும்.
3)   சுமேரியா பற்றிய புனைவுகள் தகவல்கள் போலவே மாற்றி எழுதியிருப்பது, அல்லது கதையினை தகவலாகவே நிரப்பி இருப்பது.
      இப்படியான விசயங்கள் சிலரை வியக்க வைக்கலாம். அறியாமைதானே வியப்பு. .என் அறியாமையின் வெளியின் உருவாகும் வியப்பு ஒரு படைப்பின் பெருமையாக இருக்க முடியாது. மனித தேவையின் வெளியை நிரப்பும் ஒன்று தான் படைப்பின் உச்சமாக இருக்க முடியும்.
     அப்படியான என் அவதானிப்பில் வெண்கடல் சிறுகதைத் தொகுப்பில் வாசித்து மறந்து விடக்கூடியக் கதைகளே அதிகம் உள்ளன.
     கதைகள் முழுக்க பெண்கள் ஆண்கள் சொல்லும் பிம்பங்களாகவும் அல்லது, அவர்கள் இல்லவே இல்லாத வாழ்வொன்றாகவும் தான் வாசிப்பில் தெரிகின்றது.
     ஒருபடைப்பாளியை ஏன் இதை எழுதவில்லை என்று கேட்க முடியாது ஆனால் பெண்களின் உணர்வுகள் நிராகரிக்கப்பட்ட வாழ்வாகவே ஆண்கள் உலகம் இருக்கிறது என்பதற்கு பெருஞ்சான்று பகிர்கின்றன இக்கதைகள்.

   படைப்பாளி இந்த வாழ்வு எனக்கு தருவது  என்று மட்டுமல்லாமல் இந்த வாழ்வு தர மறந்தது எது அதை நோக்கியும் எங்கள் பயணம் எதுவாக இருக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு வந்து விட்டாரென்றால், எழுத்தின் கருத்தும், தளங்களும் மாறிவிடும் என்று நம்புகின்றேன்.