Monday, December 14, 2015

மனதோடு சில கேள்விகள்

மனதோடு சில கேள்விகள்
மக்கள் சக்தி இயக்கம்
திலகபாமா
டிசம்பர் 1ம் தேதி சென்னையில் தொடங்கிய கனத்தமழை, அதைத் தொடர்ந்த வெள்ளம் பெருந் துயரத்தை மட்டுமல்லாது அதைத் தொடர்ந்து வந்த மனித நேய உதவிகளால் பலரது மனங்களில் இனம்புரியாத மகிழ்வையும் சக்தியையும் தந்து போயிருக்கின்றது. தொடர் பத்து ஆண்டுகளாக அறிவிப்புகளாலும் படம் காட்டுதலாலும் அரசியல் இதுதான் என்று நாமே அறியாமல் நமக்கு முன்னிறுத்தி விட்ட அரசியல் களம், கட்சிகள், அவர்களின் செயல் திறன்கள் எல்லாம் வெற்று கூடுகளே என்றும் அது உள்ளீடுகள் ஏதுமற்றவை என்றும் உணர்த்திவிட்டுப் போயிருக்கின்றன
            ஒரு  அரசு நலத் திட்டத்தில் 40 சதவீதம்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிந்திருந்தும் சகித்தவர்களாக இருந்து வந்து கொண்டிருந்த மக்கள் இவ்வளவு நாளும் சகிப்புத் தன்மையால் நாம் இழந்தது வெறும் நம் வரிப்பணம் மட்டுமல்ல நிர்வாகம் என்ற ஒன்றே நம்மிடம் அற்றுப் போகின்ற சூழலையும்தான் என்று இந்த வெள்ளம் நமக்கு புரிய வைத்துப் போயிருக்கின்றது
            இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தனியார்  நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டர்கள், தன்னார்வ அமைப்புகள், திடீரென அமைப்புகளாக ஒன்று கூடி பெரும் பங்கு ஆற்றியவர்கள் கையிலிருக்கும் மூலாதாரத்தை சிக்கனமாக பலருக்கு பயன்படுத்தியதில் பெரிதாக கவனத்துக்கு வந்த தனி நபர்கள் என்று  பலரும், பல் அமைப்புகளும் அதிகப் பணிகள் செய்து அரசாங்கம் இல்லாமலும் ஒரு மீட்டெழுதல் நிகழமுடியும் என்று காட்டியிருப்பதோடு, அரசாங்கம் இல்லாமல் வெறும் காணொளி காட்சி மூலம் படம் காண்பித்து கொண்டும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டும் இருப்பதை பெருஞ்செயலாகப் பேசுவதை, உள்ளீடுகள் அற்ற உற்பத்தி பெறுமானம் அற்ற வெறும் படம் காட்டும் வேலைகள் என்று புரியத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்த இக்கட்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட பலரும் அரசு பணியிலும், அரசின் ஒப்பந்தங்களிலும் வேலை செய்வோர்களும் கூடத்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  ஆனால் அவர்களே அரசாங்கத்திற்கு வேலை செய்வது என்று வந்து விட்டால் மட்டும்தான் பல பொறியாளர்களை வைத்து போடுகின்ற வடிநீர் வாய்க்கால்கள்  கூட  நீர் திரும்பி வருவதாய் அமைகின்றன. எங்கே போகின்றது உங்கள் பொறியியல் திறமைகள்?
            அதே நேரம் சாதாரண வீட்டு வேலை செய்யும் கொத்தனார் கூட மிகச் சிறப்பாக நீர் வடிவதற்கான திட்டமிடுதலை செய்து விட முடிகிற போது அரசாங்கப் பணியில் ஈடுபடுகின்ற பொறியாளர்களால் பல பொறியாளர்களாலும், மேலாண்மை நிர்வாகத்தாலும், நிதி வசதியாலும் கட்டமைக்கப்பட்ட அரசு இயந்திரத்தினால் ஏன் செயல்படவே  முடியாமல் போய் மக்கள் (நம்) வரிபணத்தை மூழ்கவிடாமல் இருக்கக் கூடிய வடிநீர் அமைப்பு கொண்ட சாலையை போட முடியாமல் போகின்றது.
நமக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது .
·         இந்தக் கட்சி போய் அந்தக் கட்சி வந்தாலும் இதே நிலைமைதான் கொள்ளையடிப்பதில் தான் நிர்வாகத் திறமை கூடுகிறதே ஒழிய, திறம்படச் செயலாற்றுவதில் இல்லை.
·         அதிகாரத்தில் கட்சிகளில் வண்ணங்கள் மாறினாலும் கீழ்மட்டத்தில் கட்சிப்பணிகளில் அரசு அலுவலகத்தில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஒரே வர்ணமாகிப் போகிறார்கள் என்பது
·         இன்றைக்கு இருக்கின்ற ஆட்சி பிடிக்கவில்லை என்றால் பிடித்த ஆட்சியோ, தலைவனோ எதிரணியிலும் இல்லை. கட்சி பெயரையும், தலைவன் பெயரையும் சின்னத்தையும் தூக்கி விட்டால் எல்லா அரசியல் கட்சி குறுநிலமன்னர்களின் நோக்கம் என்பது ஒன்றே அரசியல் பணி என்பது சம்பாரிப்பது என்பதாக
·         சம்பாரிக்கும் எண்ணம் உள்ளவன் அரசு இயந்திரத்திற்குள் இருக்கும்  வரை  நான் எது கொடுத்தும் சாதித்துக் கொள்ளலாம் என்பதாக பொதுஜனமும் மாறிப் போயிருப்பது.
·         இலவசங்கள் எனும் வார்த்தை ஒரு மாயாஜாலவார்த்தை எதுவும் இலவசம் இல்லை. நம் வரிப்பணத்தில் நமக்கே திருப்பி வழங்கப்பட இருக்கின்ற நலத்திட்டமே அது அன்றி இலவசம் விலை இல்லா பொருட்கள் என எல்லாமே வார்த்தை ஜாலம் தான்.
இப்படி எல்லாமே தெரிந்திருந்தும்  யாரையும் திருத்த முடியாது என தள்ளிப் போகும் பொதுஜனம். தானே இறங்கிட வேண்டியதுதான் என முடிவெடுக்க இந்த வெள்ள பாதிப்பு ஒரு களம் அமைத்துக் கொடுத்துள்ளது அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திக்க
மிகவும் மகிழ்ச்சியளிக்கின்ற இந்த களப்பணிக் கிடையில் நம்மிடையே இருக்கின்ற அடுத்த கேள்வியும்
Ø  சென்சேசனல் விசயத்திற்கும், பணிக்கும் என்று சேர்ந்து படி இறங்கிய சமூகம், திரும்ப  தூங்க  போய் விடுமா?   அல்லது   இன்னுமொரு சென்சேசனுக்காக காத்திருக்கப் போகிறதா? எப்பவாவது முழித்துக் கொள்ளுதல் என இல்லாது, எப்பவும் விழித்திருக்கவும் சமூகம் பணியை வாழ்வியலில் பூக்களுக்கிடை   ஒரு நூலாய் இணைத்துக் கொண்டே போகத் தயாராயிருக்கிறதா என்பது முதல் கேள்வி?
Ø  நல்லனவாய் இருக்க உதாரணங்களும் மாதிரிகளும் இல்லாது போயிருக்க தவறுகள் தவறில்லை என ஆரம்பித்து ஒன்றை மிஞ்சி ஒன்று என்று வில்லத்தனத்தை மிஞ்சிய வில்லத்தனம் என்று காண்பித்துக் கொண்டிருந்த சமூகம் முதல் முறையாக நல்லதை நடத்துவதற்கு தானே உதாரணமாயிருக்கு இன்றைக்கு. இன்னிலை தொடர் பணிக்கு எப்பொழுது தயாராகும் இச்சமூகம்.
Ø  சமூகப் பொறுப்புணர்வு அற்றவர்களாக இருந்து விட்டோமோ என்ற குற்றவுணர்வு களைய நிவாரணப் பணிகளை  பரிகாரமாய் செய்ததையே திரும்ப திரும்ப பேசிக் களைக்க போகின்றதா?


Ø   இல்லை  கட்சி பணி என்று இல்லாமல், இயக்கப் பணியாக சமூகப்பணி ஆற்றுவது சுயமரியாதை இயக்க காலத்தோடு போயிற்று என்று இல்லாது இன்று விழித்தெழுந்த சமூகம் புதிய பாதையைத் தொடங்குமா? தொடருமா?

Wednesday, December 9, 2015

இலவசமாய் ஏமாற்று வேலைகள்

'ம்' என்றால் சிறைவாசம், 'ஏன்' என்றால் வனவாசம் என்றிருந்த காலங்களை உடைக்க சிந்திய இரத்தமும் பண்ணிய தியாகங்களும் , சிந்தனை வழியாகவும் செயல் வழியாகவும் உழைத்த உழைப்புகளும் நினைந்து நினைந்து இன்றைய நிலையின் மகத்துவத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் . உருளுகின்ற உலகம் இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மட்டுமல்ல மனிதனை நாகரீகம் எனும் படிக்கட்டுகளில் ஏற்றி விடவும் முயற்சிக்கிறது. உணவு , உடை , பழக்க வழக்கங்கள் எவை மாறிய பொதும் வாழ்வதற்கான ஆசையும் அதற்கான நேர்மையான உழைப்பும், நேர்மையாய் வாழ்வதற்கான போராட்டமும் மாறாததே.
புதுமைப் பித்தன் சொல்லுவார் 200 ஆண்டுகளாக சீலைப்பேன் வாழ்வு நடத்தி விட்டோம் என்று. அப்படியான செக்கு மாட்டுத் தன சிந்தனையை கலைத்து புதிதாய் இன்றைய தேவைக்கு கட்டமைத்து, ஒழுங்கு செய்வதற்கான சிந்தனையை வடிவமைப்பது இலக்கியங்கள். அதற்கு செயல் வடிவாக்கம் கொடுப்பது மனிதனின் பல்வேறு போராட்டங்களும், அதன் ஒட்டு மொத்த சொல்லாடலாய் திகழும் அரசியலும்.

அப்படி சிந்தனை வழியாக செயலும், செயலின் வழியாக மீண்டும் சிந்தனையும் மாறி மாறி திருத்தப் படுகின்றன, வடிவமைக்கப் படுகின்றன, புதிதாய் தோற்றுவிக்கப் படுகின்றன. அரசியலின் அநாகரீகங்களின் உச்ச கட்டங்களை தேர்தலின் மிக நெருங்கிய இந்த கால கட்டத்தில் சந்தித்து வருகின்றோம்.

ஊடகங்கள் , அதிலும் தொலைக்காட்சியும், செய்தித் தாள்களும் கட்சி கட்டிக் கொண்டு இரண்டாய் நாளாய் பிரிந்து கிடக்கின்ற வேளையில் சாமான்ய மனிதனை கிறுக்காக்குவதையும் தாண்டி , ஒவ்வொரு அறிவிப்பின் பல்வேறு பக்கங்களையும் யோசிக்க வைத்தும் போகின்றன. ஏன் எதற்கு யார் என்பது கூட அறியாது சின்னங்களில் குத்தி விட்டு வரும் நிலை மாறியிருக்கின்றது. சொல்வதை எல்லாம் நம்பி விடுகின்ற நிலை தாண்டி சொல்வதற்கு பின்னால் இருக்கின்ற மறைக்கப் பட்ட பகுதிகளை வெளிச்சமிட்டு காட்டியும் போகின்றன அவைகளே அறியாது ஊடகங்கள்.

இலவசங்களாய் வந்து விழுகின்ற அறிவிப்புகள் , தேர்தல் வாக்குறுதிக்கென்று ஏழுமலை ஏழுகடல் தாண்டி வைக்கப் பட்ட அரக்கனின் உயிராய் பாட்டி சொன்ன கதைகளின் புனைவுகளையும் வென்று சிந்துபாத் கதையாய் நீளப் போகின்றன. 

அறிவிக்கப் பட்ட இலவசங்கள் மக்களுக்காகவா? அல்லது அடுத்த கட்சிக் காரனை விட பெரியதாய் சொல்லியிருக்கின்றேன் என்று பூச்சாண்டி காட்டவா? எதை இலவசமாய் தரப் போகின்றார்கள் ? முதலில் அவை இலவசங்கள் தானா? எந்தக் காலத்தும் யாரும் எதையும் சும்மா தந்து விட வும் சும்மா பெற்று விடவும் வாய்ப்பே இல்லை என்பது பொது ஜனம் அறியாததா? அதுவும் இன்றைய வணிகச் சூழலில், எல்லாவற்றுக்கும் விலை பேசும் கால கட்டத்தில் அதெல்லாம் சாத்தியம் தானா?

மக்கள் பணத்தையே சேமிப்பாக்கி அதிலேயே கடனும் தந்து , அதற்கெனவே வட்டி வசூலிக்கும் சில சேமிப்புத் திட்டங்களைப் போல் , மக்கள் வரிப்பணத்திலேயே ஆட்சி நடத்தும் அரசாங்கங்கள் மனிதனின் வாழ்வதற்கான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது அதன் கடமையாக இருக்க எப்படி சாத்தியமாகின்றது? கடமைகளை? இலவசங்களாய் சொல்லிப் போக? உணவும் உடையும் இருப்பும் வாழ்வை உயர்த்தும் கல்வியும் தொடரும் வாழ்வும் பயணத்தில் மக்களின் நோய் , வேலையின்மை முதுமை என்று பற்பல காலங்களில் உருவாகும் அடிப்படி தேவைகளுக்கு சாமான்யனின் முதுகு தடவி தோள் கொடுக்கும் அரசாங்கத்தை மக்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கும் மக்களாட்சியால் இதுவரை சாத்தியமாக்க முடிந்ததா? முடிந்திருந்தால் இன்று இலவச அறிவிப்புகளாய் சொல்லப் படுபவை எல்லாம் திட்டங்களாய் அறிவிக்கப் பட்டிருக்கும் , சாதாரண வியாபாரியின் விற்பனை தந்திரத்தோடு  ”இலவசமெனும்பேரில் அறிவிக்கப் பட்டிருக்காது எந்த கட்சித் தலைவரும் அவர்கள் சொந்த உழைப்பின் பணத்திலிருந்து இலவசமாய் துன்பம் கண்டு துயரம் கண்டு தானம் தரும் எண்ணத்தில் தந்து விட வில்லைஇலவசங்களை

மகள் உழைத்து சேமித்த சேமிப்பிலிருந்து நேராகவும் மறை முகமாகவும் கட்டிய வரிப் பணத்திலிருந்து மக்களுக்கே அவரவர்கள் பெருந்தன்மையோடு இலவசமாய் கொடுக்கப் போவதாய் அறிவித்துப் போகின்றார்கள். அறிவிப்புகள் எல்லாம் நிஜங்கள் போல தோற்றம் தரும் மாயைகளே.

சாமான்ய மனிதனாய் இருந்து அரசாங்க அலுவலகத்தில் தனக்கு சேர வேண்டிய உரிமைகளை கூட பெற்றுக் கொள்ள முடியவில்லையே. தெரிந்த ஆட்களோடுதான் செயல்படுத்த முடிகின்றது. ஊனமுற்றவர்களும் வயோதிகர்களும் யாரையும் எதிர்பார்க்காது வாழக் கூடிய தன்னிச்சையான வாழ்வுக்கு யார் உத்திரவாதம் தர முடியும்? மொத்தத்தில் 'இலவசம்' எனும் வார்த்தையின் அர்த்தத்தை மாற்றி விட்டுப் போயிருக்கின்றார்கள் 'ஏமாற்றென்று'.

mathibama@yahoo.com












சட்டம் போட்டுதனிநபரின் (ஜெயலலிதா) பிறந்த நாளை கொண்டாட வைக்கும் அதிகார துஷ்பிரயோகம்

இலவசங்களாய் ஏமாற்றுகள்எனும் தலைப்பில் 2006 இல்  முன்பு ஒரு கட்டுரை எழுதினேன். அதில் மக்கள் பணத்தையே சேமிப்பாக்கி அதிலேயே கடனும் தந்து , அதற்கெனவே வட்டி வசூலிக்கும் சில சேமிப்புத் திட்டங்களைப் போல் , மக்கள் வரிப்பணத்திலேயே ஆட்சி நடத்தும் அரசாங்கங்கள் மனிதனின் வாழ்வதற்கான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது அதன் கடமையாக இருக்க எப்படி சாத்தியமாகின்றது? கடமைகளை? இலவசங்களாய் சொல்லிப் போக? உணவும் உடையும் இருப்பும் வாழ்வை உயர்த்தும் கல்வியும் தொடரும் வாழ்வும் பயணத்தில் மக்களின் நோய் , வேலையின்மை முதுமை என்று பற்பல காலங்களில் உருவாகும் அடிப்படி தேவைகளுக்கு சாமான்யனின் முதுகு தடவி தோள் கொடுக்கும் அரசாங்கத்தை மக்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கும் மக்களாட்சியால் இதுவரை சாத்தியமாக்க முடிந்ததா? முடிந்திருந்தால் இன்று இலவச அறிவிப்புகளாய் சொல்லப் படுபவை எல்லாம் திட்டங்களாய் அறிவிக்கப் பட்டிருக்கும் , சாதாரண வியாபாரியின் விற்பனை தந்திரத்தோடு  ”இலவசமெனும்பேரில் அறிவிக்கப் பட்டிருக்காது எந்த கட்சித் தலைவரும் அவர்கள் சொந்த உழைப்பின் பணத்திலிருந்து இலவசமாய் துன்பம் கண்டு துயரம் கண்டு தானம் தரும் எண்ணத்தில் தந்து விட வில்லைஇலவசங்களை

  “ இலவசங்களாய் நாங்கள் தருகின்றோம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள்  யாருடைய பணத்தில் இருந்து கொடுக்கின்றார்கள். மக்கள் நலனுக்காக செலவழிக்கப் மக்கள் தந்த வரி  பணத்திலிருந்து தானே . சொந்தக் காசு போட்டு எதுவும் நிகழ்த்தவில்லையே பின் ஏன் அதை நான் வழங்கினேன் எனும் வீண் தம்பட்டம்
அடுத்து வந்த அரசுவிலைஇல்லா பொருட்கள்என்று பேரை மாத்தி வழங்கினாலும் அதுவும் யாருடைய சொந்த கைக்காசுமாக இல்லாமலிருக்கும் போது அதில் நான் வழங்கினேன் என்ற தம்பட்டம் மட்டும் ஓயவில்லை என்பதற்கு கணினியில் கூட முதலமைச்சர் படத்தை போட்டு தந்து கொண்டிருப்பது ஒரு உதாரணம்.
  இன்று தமிழக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் பணி புரிந்து கொண்டிருக்கும் எல்லா மருத்துவமனைக்களுக்கும் ஒரு அறிவிப்பு அனுப்பப் பட்டிருக்கின்றது. அதில் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் 24ம் தேதிக்குள்  660 இலவச மருத்துவமுகாம்களை அரசின் சார்பில்  சுகாதாரத் துறை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அது சம்பந்தப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்குள் இணைந்திருக்கும் தனியார் மற்றும் அரசு  மருத்துவமனைகள் எங்கெங்கு எந்தெந்த தேதிகளில் இலவச மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எழுதப்பட்ட உத்தரவில் இது தமிழக முதலமைச்சரின் 66ஆவது  பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான  ஏற்பாடுகள் என்பதை சொல்லப்பட்டிருக்காவிடினும் 660 மருத்துவ முகாம்கள் என்ற எண்ணிக்கையும் இந்த அறிவிப்பை முதலில் வாய் மொழியாகத் தந்த அதிகாரிகளும் இதை உறுதி செய்தார்கள். ஒரு தனி நபரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அரசு செலவில் எப்படி நடத்த முடியும்மன்னர்களின் பிறந்த நாட்களுக்கு கைதிகளை விடுதலை செய்யும் அல்லது திட்டங்களை அறிவிக்கும் மன்னர் ஆட்சியின் மனோபாவம் 66ஆவது ஆண்டுகள் குடியரசினைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஜனநாயக நாட்டிலும் உலவிக் கொண்டிருக்கின்றது என்பது துரதிஷ்டம்தான். இதில் அறநிலைத் துறை அமைச்சர்கள் எல்லாக் கோவில்களிலும் அரசின் பணத்திலிருந்தே முதலைமைச்சரின் பிறந்தநாளுக்கான  பூஜை ஏற்பாடுகள் செய்ய அறநிலைத் துறையிலிருந்தே உத்தரவு போட்டே செய்வார்கள் போலும். 660 என்ன 6660 இலவச மருத்துவ முகாம்களை வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும். தனி நபரின் பிறந்தநாளை மக்கள் பணத்திலிருந்து கொண்டாட இவர்களுக்கு யார் உரிமை தந்தது. 6660 இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதற்கான எல்லாவித பண பலங்களையும் தமிழக முதலமைச்சர் மட்டுமல்ல அவர்கள் கட்சியில் இருக்கும் ஒவ்வொரு மந்திரியும் சட்டமன்ற உறுப்பினர்களும் கூட பெற்றிருக்கிற  போது கடைத்தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் மனப் போக்கு எதற்கு. அதுவும் தெள்ளத் தெளிவாகஅழுத்திக் கேட்டால் அது நானில்லைஎன்று சொல்லிக் கொள்ளும் விதமாக அரசாங்க ஆணையை தயார் செய்ய யார் தான் இவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்களோ. காசை எடுத்துட்டு போனால்தான ஊழலுன்னு சொல்லுவான். நான் பேரு வாங்க அவன் பணத்தை அவனுக்கே செலவழிச்சா கண்டுக்காம போயிடும் பாமர சனம் என்பதையும், தனியார் மருத்துவமனைகள் இதை எதிர்த்து கேள்வி கேட்க எதிரில் ஆட்களும் இல்லாத சூழலையும் உண்டாக்கி வென்று போய் விடுவதும் என்னே சாமர்த்தியம்.
இவ்வளவுக்கு மாதந்தோறும் ஒரு இலவச மருத்துவ முகாம்களை  முதலமைச்சர் காப்பீடு  திட்டத்தின் கீழ்  இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகள் நடத்தி வருக்கின்றன. அதன் அடிப்படையில் ஏற்கனவே நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் முகாம்களை ரத்து செய்து விட்டு எங்கள் ஆணைக்கு அவசரமாக அடிபணியுங்கள் என உத்தரவு சொல்கின்றது. ஒரு வாரத்திற்குள் அவர்கள் சொல்லுகின்ற கிராமத்தில் இடவசதி ஏற்பாடு , உள்ளூர் அனுமதிகள் இவ்வளவும் பற்றிய எந்த அக்கறையும் இல்லை.
யார் கண்டது 25ம் தேதிக்குப் பிறகு 660 இலவச மருத்துவ முகாம்களை நடத்தியதாக முதலமைச்சரிடம் மாண்புமிகு சுகாதாரத் துறை ஆசி பெறக் கூடும்.
பார்த்துவிட்டு ரிமோட்டில் சேனலை மாத்தி விட்டு இரசித்தபடி இருப்போம் வாழ்க ஜனநாயகம்!



Thursday, November 26, 2015

PART 3

            அங்கிருந்து கிளம்பி பேருந்திலேயே நகரமும் சுற்றி வருகின்றோம். London eye எனப்படும் பெரிய ரங்கராட்டினம், தேம்ஸ் நதிக்கரை, புகைபோக்கிகளை பிரதானமாக்க கொண்ட வரிசை வீடுகள். புகைபோக்கிகள் தற்பொழுது    வீட்டை வெப்பமூட்ட எத்தனையோ மின்சார சாதனங்கள் வந்து விட்டாலும், பழமையைப் பேணும் மனோநிலை கொண்ட இங்கிலாந்துக்காரர்கள் ஒரு வீட்டின் பெருமையை அதன் புகை போக்கி அமைக்கப்பட்ட, அறையை வெப்பமூட்ட வைக்கப்படும் அடுப்பின் அமைப்பிலும் தான் தீர்மானிக்கின்றனர்.
       Loest miminter abbey என்ற இடத்திற்குப் போகின்றோம். அது அரசாங்க கட்டிடங்கள் முழுக்க இருக்க கூடிய இடம். மிகப்பெரிய மைதானத்தில் இன்றைய பார்லிமெண்ட், பழைய அரண்மனை தேம்ஸ் நதிக்கரையின் வடக்குகரையில் உள்ளது.    11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சதுக்கத்தில் நிற்கின்றோம். தற்பொழுது, காந்தி மண்டேலா போன்றோர்களின் சிற்பத்தை வைத்துள்ளனர்.1800களில் தீப்பிடித்து எரிந்த அரண்மனை இன்று புதுப் பொலிவுடன் நம் முன்னால் நிற்கிறது. சுற்றி மிகப்பெரிய கட்டிடங்கள், வானில் நீல நிறமோடு நகர்ந்து கொண்டே இருக்கும் மேகங்கள் நிலத்தில் இருந்த கட்டிடங்கள் அரண்மனை, மணிக்கூண்டு சர்ச் என எல்லாம் நகன்று கொண்டே இருப்பதாக காட்சி தருகின்றது.
            ஒட்டு மொத்த மருத்துவக் குழுவினரும் அங்கு அமர்ந்து படம் பிடித்துக் கொள்கின்றனர். நண்பர்கள் மத்தியில் இருந்து விலகிக் கொள்கின்றோம். நண்பர்களின்  மனைவிகளும் கணவர்களும்.
            புகைப்படம் எடுத்து முடித்தவுடன் கிளம்பி தேம்ஸ்  நதிக்கரை நோக்கி பயணமாகின்றோம். நாமெல்லாம் லண்டன் பாலம் என்று சொல்லுகின்ற டவர் பிரிட்ஜ்க்கு பேருந்தில் இருந்து இறங்கி நடந்து போகின்றோம். வழியில் நாயுடன் பலரும் நடை போய்க்கொண்டிருக்க ஒருவரின் நாய் தன்னுடைய அவசரத்தை நடு வீதியிலேயே முடிக்க உடனடியாக பையிலிருந்து ஒரு பாலிதீன் பையை எடுத்து அப்படியே கையில் மாட்டி அள்ளி எடுத்து குப்பை பெட்டி தேடி போடுகின்றார். இது வரமா, சாபமா என்று வாசிப்பவர் அக்கறைக்கே விட்டு விடலாம். டவர் பிரிட்ஜ் அருகே சென்று தேம்ஸ் நதிக்கரையின் சில்லிப்பை உணர்ந்த படி உலா போகின்றோம். எதிர்க்கரையில் நவீனத்தின் சாட்சியாக சின்ன வடிவம். என சொல்ல முடியாத கட்டிடங்கள் இங்கிலாந்து, ஜரோப்பிய முக்கிய நகரங்களில் ஒரு பக்கம் பழமையின் அடையாளங்களும், இன்னொரு பக்கம் நவீனத்துலகத்தின் வளர்ச்சியும் நாம் பார்க்க முடிகின்றது.
            அங்கிருந்து மேடம் துசா போய்ச் சேருகின்றோம். பிரபலங்களின் மெழுகுப் பொம்மைகள் இருக்கக்கூடிய இடம். உள்ளே நுழையும் முன்பு பசியெடுத்ததால் அருகில் இருந்த கடைகளில் பர்கரும், சாசேஜீம் வாங்கி சாப்பிடுகின்றோம். 
            மரியே துசாட்






எனும் பெண்மணி 1761ல் ப்ரான்ஸ் தேசத்தில் வசித்து வந்தாள். அவளுடைய அம்மா மெழுகு பொம்மைகள் செய்யக்கூடிய மருத்துவர் ஒருவரின் வீட்டில் பணிபுரிந்து வந்தாள்.
            துசாட் தனது மெழுகு சிலையை வால்டயர் எனும் பிரானசு எழுத்தாளரின் உருவத்தை சிலையாகச் செய்தாள். பிரான்சு புரட்சியின் போது பாதிக்கப்பட்டவர்களின் உருவத்தை மெழுகு சிலையாக செய்தது புரட்சியின் ஒரு தருணமாக மாறிப்போக அவளது ஒட்டு மொத்த சேகரிப்புகள் பிரசித்தமாகத் தொடங்கின. லண்டனில் இருக்கும் இந்த அரங்கமே 1835ல் பெக்கர் தெருவில் ஒரு அருங்காட்சியகமாக ஆரம்பித்தது ஆகும்.             
            இப்பொழுது தற்பொழுதான பிரபலங்களும் இந்த சிலைகளின் வரிசையில் சேர்ந்துள்ளனர்.

    மறுநாள் எத்தனை மணிக்கு கிளம்ப வேண்டும் என்று தாமஸ் cook சொன்ன தகவல்களோடு  உறங்கச் சென்றாச்சு 

Monday, November 23, 2015

நாள் 2( 19.7.15)
      காலை உணவு முடித்து இரண்டு சொகுசுப் பேருந்துகளில் ஒட்டு மொத்த குழுவினரும் ஏறினோம் லண்டன் மாநகரை சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம் முக்கிய வீதிகளில் பேருந்திலிருந்தபடியே சுற்றி வந்தபடி இருந்தோம்.

        11மணிக்கு பக்கிங்காம் அரண்மனை முன்னால் அணிவகுப்பு நடப்பதைப் பார்க்க கூடினோம் எனது கணவரின் உடன் படித்த நண்பர்கள் 40 பேரும் அவர்களது குடும்பத்தினரும். எனவே கொண்டாட்டங்களுக்கும் கும்மாளத்திற்கும் அளவே இல்லை. யாரிடமும் அடுத்தவரோடு நிற்கின்றோம் என்ற அந்நியத்தன்மை இல்லாது அந்தக் குழு இருந்தது. பழங்காலக் கட்டிடங்கள், கண்ணாடி, மாளிகைகள், உயர்ந்து நிற்கும் தேவாலயங்கள், தேம்ஸ் நதிக்கரைகள் சொகுசுப்படகுகள், நினைவிடங்கள், வெற்றி நினைவு சின்னங்கள் நேர்கோட்டுத் தெருக்கள் வாத்தியங்கள் முழங்க காவலர்கள் மாறுவதை வேடிக்கை பார்க்கின்றோம். எங்கெங்கு பார்த்தாலும் selfie stick. தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சி எல்லா இடமும். யாரும் அடுத்தவர்களை எதிர்பார்ப்பதில்லை என்பதை விட, தன்னையே அதிகமாக உற்று நோக்க, எல்லாவற்றிலும் தான் மட்டுமே நிறைந்திருப்பதாக பழகிவிட்டார்கள். எடுத்தவுடன் அல்லது எடுக்கும் போதே, face bookல் போடுவதற்கான படம், profile picture, எது போட்டால் like கூட வரும் comment அதிகம் வரும் என சிந்தனைகள் ஒடுவதை வார்த்தைகளாகவே கேட்க முடிகிறது.











 

Saturday, November 21, 2015

1.30 சிவகாசியிலிருந்து கிளாம்பும் போதே பயணம் சவாலானதாக ஆகிவிடும் என்று யோசிக்க வில்லை. எப்பவும் பாஸ்போர்ட் , பயண ஆவணங்களை என்னுடையது என் கணவரதை என்னோடு வைத்துக் கொள்வதே வழக்கம். இந்த முறை அவர்  தனது ஆவணங்கலை தனியாக வேண்டுமென்றதால்  தனியாக தோள்பை ஒன்றில் எடுத்து வைத்திருந்தேன். மருத்துவமனை வேளைகள் முடித்து கடைசி நிமிடத்தில் கிளம்பிய போதும் வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கு லைவ் கமெண்டிரி கொடுக்கின்ற ஆர்வத்தில் அவர் கையில் சேர்ப்பித்த பையை விட்டு விட்டு வண்டியேறிவிட்டார் ஏற்கனவே சரியாக 1. 15 மனீ நேரத்தில் போய் ஆகவேண்டிய நிர்பந்தத்தில் இருந்தோம். ஊர் எல்லை வந்த போது பாஸ்போர்ட் பை எங்கே என்று கேட்ட போது தான் வாட்ஸப்பிலிருந்து வெளியே வந்து என்கிட்ட இல்லையே என்று சொல்ல ப்தற்ரம் திற்ரிக் கொண்டது. இனி வீடு போய் எடுத்து கொண்டு வந்து கிலம்பினாலும் விமானத்தை விட்டு விட வேண்டியதுதான் என்ற நிலையில் மருத்துமனை வேலையில் இருந்தவருக்கு தகவல் சொல்லி வீட்டிலிருந்து பையை எடுத்து வர ஏற்பாடு செய்துவிட்டு காத்திருந்தோம்..பை கைக்கு வந்த பிறகு  எப்படிக் கிலம்பினாலும் 30 நிமிடத்தில் சிவகாசியிலிருந்து மதுரை போவது சட்தியமில்லை என்ற சவாலோடவே பயணம் துவங்கியது
சரியாக 35 நிமிடத்தில் மதுரை விமானநிலையத்தை வந்தடைந்து விமனத்தில் ஏரிய பிறகுதான்  மூச்சு நிதானமாகியது
4.15க்கு சென்னை வந்து சேர்ந்தோம் நிதர்ஷன் வந்து காத்திருந்தான். இன்னும் 2 மனி நேரம் இருக்கின்றது என்ற நிலையில்  அவனோடு பேசிக் கழித்த இரண்டு மணி நேரம் மிகவும்  மகிழ்ச்சியானது.

6.30 பையனிடமிருந்து விடைபெற்று விமானநிலையத்திற்குள் நுழைக்கின்றோம்   
9.30மணிக்கு எமிரேட்ஸ் விமானல் ஏறிt 3.15நிமிட நேரபயணம்
                 லண்டன் நேரப்படி 8.25 விமானம் தரையிறங்குகிறது. 12.15க்கு நோவாடெல் ஹோட்டலுக்கு வந்து சேர்கிறோம்  அறை கொடுக்கப் படஇன்னும் 2மணி நேரம் ஆகும் என்பதால் வரவேற்பறையில் காத்திருக்கிறோம். ஒருபுறம் தேம்ஸ் நதியிலிருந்து பிரிந்து வரும் நதியின் ஒரு பகுதி ஒருவில்லாய் ஒடிக் கொண்டிருக்கிறது. அதன் சிலிர்ப்பும் சூரியனின் சூடும் சேர்ந்து சுகமானதாக இருக்கின்றது குளிருக்கு உடுத்தும் ஆடைகளின் தேவை வெயில் காலத்திலும் இருக்கின்றது என்பது அப்பொழுது தான் புரிந்தது.
      வரவேற்பறையில் காத்திருக்கும் நேரத்தில் டீபாயில் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு விளையாட்டுகள் தொடு திரையில் தெரிகின்றன. குழந்தையாகி கொண்டிருந்து விட்டு காத்திருக்கின்ற நேரத்தில் அருகில் இருந்த எமிரோட்ஸ் ஏர்லைன்ஸ் வின்ச்க்கு போனோம். அது தேம்ஸ் நதியைக் கடத்திக் கொண்டது. மனிதர்கள் விதவிதமான நாய்களோடு நடந்து கொண்டிருக்கின்றனர். உயரத்திலிருந்து நதியையும், நகரத்தையும் பார்க்கின்றோம். நாம் விஸ்வரூபம் எடுத்து இந்த உலகத்தை, பார்க்கத் தொடங்கி விடுகின்றோம். கடுகுப் பார்வையில் உலகம் துல்லியமாகவும், புள்ளிகளாகவும் தெரியத் தொடங்குகின்றது.
      எமிரேட்ச் நிறுவனம் விமானப் பயணம் எப்படிப்பட்டது. என்று குழந்தைகளுக்கு உண்ர்த்துவதற்கான கண்காட்சி வைத்திருந்தது. குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் அந்த அனுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றார்கள். பைலட்டாக, பயணியாக பல்வேறு அனுபவங்களைப் பெற்றுக் கொண்டு செல்கின்றார்கள். பாலத்தின் மேலே சாலை, அதனடியில் அலுவலகக் கட்டிடங்கள் என இடங்களை முழுவதும் பயன்படுத்தி இருந்தார்கள். தேம்ஸ் நதிக்கரையில் மேலிருந்து பார்க்க இரு இடத்தில் மணலைப் பரப்பி கடற்கரை போன்ற தோற்றத்தை தந்திருந்தார்கள் படகுகள், சாப்பாட்டு விடுதிகள் ஆகியிருந்தன. நதியில் நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டு பலர் நனைந்த உடையோடும் சிலர் மெடல்களோடும் கடந்த படி பீரித்தி வருவதற்காக காத்திருக்கின்றோம் ஹோட்டலில் எல்லாரும் லண்டன் eye ஏறக் கிளம்புகின்றார்கள். நாங்கள் செல்லவில்லை.
      உறவினர்களான  அவர்கள் வந்து சென்றதும் லிம்பம் நடத்தும் குறும்படநிகழ்ச்சிக்கு போகின்றோம். வழியெங்கும் பழைமை மாறாத புகை போக்கியுடன் கூடிய வீடுகள் 2005ல்  நான் வந்த போது இருந்த அதே தோற்றம் எதுவும் மாறவில்லை. ஈஸ்ட் காம்பில் (east ham) நடக்க இருக்கின்ற குறும்பட விழாவிற்கும் போகின்றோம். ஐந்து மாடிக்கு குறையாத கட்டிடங்கள் under grounder ற்க்கு தளமும் இருக்கின்றது. ஈஸ்ட் காம்பில் நுழைந்தது தமிழ் எழுத்துக்கள்  கடைகளின் பெயர் பலகைகளில்  தெரிகின்றன  கே.கே.ராஜா வரவேற்கிறார். பெளசர் மற்றும் எங்களை அழைத்துச் சென்ற சபேசன் ராஜா ஆகியோர் அங்கிருந்தனர்.  குறும்படங்கள் ஒடத்தொடங்குகின்றன, வெளியில் 7.30 மணிக்குப் பிறகும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. குளிரோடு அனைவரையும் சந்திக்கும்  விருப்பில் வந்திருந்தாலும்  உணர்வு இந்திய நேரத்தோடும் உடல் இங்கிலாந்து நேரத்தோடும் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த்து.
        தொடர்ந்து இருக்க முடியாது இடைவேளையின் போது யமுனா ராஜேந்திரன் பத்மநாபாஐயர் ஆகியோரை சந்தித்துவிடைபெற்றுக் கொண்டு கிளம்புகின்றேன். நான் மட்டுமானால் இருந்திருப்பேன் முழுநிகழ்விலும்.

அவர்கள் நிகழ்வில் என்னை கெளரவிக்க இருப்பதாக சொன்னார்கள். கணவரோடுவந்திருப்பதால் நிகழ்க்கு பொருத்தமில்லாத அவரை அதில் உட்கார வைத்ததின் குற்ற உணர்வோடு இருந்தேன். எனவே கிளம்ப வேண்டி இருந்தது 9மணிக்கு வெளியே வந்தால் இன்னும் சூரியன் மறையவில்லை. திரும்பி வந்து ஏதாவது சாப்பிட ஒரு உணவு விடுதியைத் தேடுகின்றோம். உணவுகளின் விலைப்பட்டியலில் 10பவுண்ட்ஸ் என்றாலே ஆயிரம் ரூபாயைத் தொட்டு விடுகிறது. குறைந்த விலைப்பட்டியலே 1000ரூபாயிலிருந்து தான் தொடங்குகின்றது.fish and chips இன்னும் சில fish items மும் வாங்கி சாப்பிட்டு விட்டு வெளியேறுகின்றோம். Londan eye பார்க்கச் சென்றவர்கள் திரும்பி வந்திருந்தார்கள். காலை7 மணிக்கு காலை உணவுக்கு வந்துவிட வேண்டும் எனச் சொல்லி அனுப்பி வைத்தனர் இந்த சுற்றுப் பயணத்தை ஏற்பாடு செய்திருந்த தாமஸ் குக் நிறுவனத்தினர். இனி பயணம் அவர்கள் கையில்










Saturday, September 26, 2015

வெண்கடல் -விமரிசனம்
எழுத்து ஒரு படைப்பாளி எவ்வளவுதான்  திட்டமிட்டாலும், அதையும் தாண்டி அவன் வாழ்வோடு சேர்ந்து தன்னை எழுதிக் கொள்கின்றது. எழுதுபவனிலிருந்து பிரிக்கப்பட்ட ஒன்றாக அது செயல்படுவதில்லை என்பது என் கருத்து.
     அதில் படைப்பாளியின் மனம், தீர்மானங்கள் எல்லாமும்  செயல்படும் ஒரு தளமாகவே எழுத்து இருந்து வருகின்றது.
     மனிதர்களிடையே நிமிடந்தோறும் எவ்வளவோ சம்பவங்கள் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன. வாழ்க்கையே அதன் சேர்க்கைதான். அதன் சேர்க்கை உணர்வின் நூலிழையில் நிகழ்கின்றது. அந்த இரண்டையும் சரியாகச் சொல்லுகின்ற ஒருவன் எழுத்து சிறந்த சிறுகதை ஆகிறது.
     பல நேரங்களில் சம்பவங்கள் மட்டும் பதியப்பட்டு விடுகிறது.
நாவல்கள் தகவல்களால் நிரப்படுகின்ற  ஆபத்து நேர்ந்தது போல வெற்றுச் சம்பவங்களால் நிரப்பி விடுகின்ற சிறுகதைகளின் பெருக்கம் எது நல்ல சிறுகதை என்ற தேர்வுக் குழப்பத்தை தந்து விடுகின்றது.
இந்த வெண்கடல்  தொகுப்பில் படைப்பாளி எழுதிச் சொல்லுகின்ற 11சிறுகதைகளை வைத்துக் கொண்டு எச்சிறுகதைகள் சம்பவங்களிலிருந்து உணர்வுகளில் ஊறி சிறுகதையாகவும், உணர்வில் ஊறாமல் உலர்ந்து சம்பவங்களாகவும் நிற்கிறது என்பதை உதாரணம் காட்ட முடியும். இப்படி எல்லாவற்றுக்குமான உதாரணமாக இருப்பது வெண்கடல் நூலின் சிறப்பாகவே சொல்லலாம்.
பிழை –உணர்வோடான சிறுகதை
தீபம் உலர்ந்து விட்ட சிறுகதை
தனித்து விடப்பட்டவர்கள், அல்லது அவர்களது குரல்களை யாரும் கவனிப்பதில்லை என்ற தாழ்வுணர்ச்சி  கொண்டவர்கள் தங்களின் அன்றாட செயல்களை சிந்தனைகளை, கேட்பவருக்கு தேவையானதா, சந்தர்ப்பத்திற்கு பொருத்தமானதா என்றெல்லாம் யோசிக்காது நிமிட இடைவெளியிடாது நடந்தவற்றை சிந்தித்தவற்றை பேசிக்கொண்டே இருப்பார்கள் இத்தொகுப்பில் சில சிறுகதைகள் தொடர்ந்து வாசிப்பில் கதை இருப்பது போல் தோன்றினாலும் அவை வெறும் சம்பவங்களே, கேட்போருக்கான வாசிப்போருக்கான உணர்வாக மாற முடியாத தனிப்பட்ட சம்பவங்களாகவும் வெற்று உரையாடல்களாகவுமே உள்ளன. இவ்வரிசையில் தீபம், கிடா இவற்றைச் சொல்லிப் போகலாம்.
இத்தொகுப்பில் உள்ள எல்லா கதைகளுமே சமூக வெற்றி, வாழ்வு என்று ஒத்துக் கொள்ளாத விசயங்களை மையமாகக் கொண்டே  அமைந்துள்ளன என்று கூடச் சொல்லலாம். அப்படியென்றால் விளிம்பு நிலை மக்களை பேசுகிறதா நல்ல விசயம் தானே எனக் கேட்கலாம். ஆனால் விளிம்பு நிலையே சாஸ்வதம் என நம்பவைக்கின்ற ஆபத்தை செய்து விடுகின்றன. மையத்தை நோக்கி நகர்வதும் விளிம்பு நிலையோடு கைகோர்ப்பதும் இரண்டும் பெரிய வித்யாசமில்லை என்று உணர வைப்பதான  கலையாக கதைகள் இல்லை.பிழை கதையில் வரும் சரித்திரத்தில்   ஈயாக இருந்தால் போதும் என்பது அப்படியான சிந்தனைத் தளத்திற்கு சான்று.
ஒரு மனிதன் தன் வாழ்நாள் சாதனையாக நினைப்பது அவன் காலத்திலேயே ஏதுமற்ற ஒன்றாக மாறி விடுகின்றது என்பதற்கான சான்றாக குருதி , பிழை சிறுகதைகள் உள்ளது.
தீபம், குருதி இரு சிறுகதைகளும் நிலம் ஒரு ஆணின் வாழ்வில் எத்தனை பெரிய முக்கியத்துவத்தை நிகழ்த்துகிறது என சொல்லிப் போகின்றது.
இத்தொகுப்பில் கதைகளுக்கிடையில் பேசப்படுகின்ற தத்துவ விசாரங்கள், கவிதைத் தனமான காதல் வரிகள், சில அரிய தகவல்கள்.
பக்கம்-192
1)   எல்லாமே நெருப்பு தான் என்று.
ஆமாம்
     உடனே எனக்கு தோன்றியது என்வழி நீரின் வழிதான் என்று.
     இந்த தேசம் நெருப்புக்குண்டமாக ஆக வேண்டாம் இது ஒரு குளிர்ந்த தடாகமாக ஆனால் போதும்.
முட்டாள் தனம். நீருக்குள்ளும் நெருப்புதான் இருக்கிறது அந்த நெருப்பு நம்மை ஆசீர்வதிக்கட்டும்.
2)   நமக்கு பிடிச்சிருக்கிறவங்களுக்கு நம்ம மேலே பிரியமிருக்கான்னுதானே நாம பார்ப்போம் குளத்துப் பாசி போல ஒரு துணியைப் பிடித்து எடுத்தால் எல்லாம் சேர்ந்து அசைந்து இழுபட்டு வரும்.
3)   சுமேரியா பற்றிய புனைவுகள் தகவல்கள் போலவே மாற்றி எழுதியிருப்பது, அல்லது கதையினை தகவலாகவே நிரப்பி இருப்பது.
      இப்படியான விசயங்கள் சிலரை வியக்க வைக்கலாம். அறியாமைதானே வியப்பு. .என் அறியாமையின் வெளியின் உருவாகும் வியப்பு ஒரு படைப்பின் பெருமையாக இருக்க முடியாது. மனித தேவையின் வெளியை நிரப்பும் ஒன்று தான் படைப்பின் உச்சமாக இருக்க முடியும்.
     அப்படியான என் அவதானிப்பில் வெண்கடல் சிறுகதைத் தொகுப்பில் வாசித்து மறந்து விடக்கூடியக் கதைகளே அதிகம் உள்ளன.
     கதைகள் முழுக்க பெண்கள் ஆண்கள் சொல்லும் பிம்பங்களாகவும் அல்லது, அவர்கள் இல்லவே இல்லாத வாழ்வொன்றாகவும் தான் வாசிப்பில் தெரிகின்றது.
     ஒருபடைப்பாளியை ஏன் இதை எழுதவில்லை என்று கேட்க முடியாது ஆனால் பெண்களின் உணர்வுகள் நிராகரிக்கப்பட்ட வாழ்வாகவே ஆண்கள் உலகம் இருக்கிறது என்பதற்கு பெருஞ்சான்று பகிர்கின்றன இக்கதைகள்.

   படைப்பாளி இந்த வாழ்வு எனக்கு தருவது  என்று மட்டுமல்லாமல் இந்த வாழ்வு தர மறந்தது எது அதை நோக்கியும் எங்கள் பயணம் எதுவாக இருக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு வந்து விட்டாரென்றால், எழுத்தின் கருத்தும், தளங்களும் மாறிவிடும் என்று நம்புகின்றேன்.