Thursday, December 11, 2014

விமரிசனம்

சாகசக் காரிகள் பற்றியவை  கவிதை தொகுப்பு  
ஆண் அடையாளமான வெற்றிகள் 
பெண்ணுடையவை அல்ல
திலகபாமா
இன்றைக்கு கவிதை இலக்கியம் என்பது  மட்டுமல்ல உரையாடல் கூட எதிராளி அதாவது கேட்பவனுக்கு ரசனைக்குள்ளதாய் அல்லது அவனது அனுபவத்திற்குட்பட்டதாய் இருக்கும் போது மட்டுமே பரஸ்பர உரையாடல் நிகழக் கூடியதாய் ஆகிப் போய் விட்டிருக்கின்றது.
புதிய உணர்தல்களை புரிந்து கொள்ளவும் உணர முற்படுவதுமான தருணங்கள் குறைந்து கொண்டே செல்கின்றன.
 இப்படியான இடத்தில் இருந்து கொண்டு தான் கவிதைகள் பார்க்கப் பட்டும், பெண்கள் எப்படி எழுத வேண்டும் என்றும் சொல்லப் பட்டுக் கொண்டிருக்கின்றது
2000 த்தில் உங்கள் ( பெண்) உணர்வுகள் எங்களுக்கு புதிது  எழுதுங்களேன் என்று கேட்டவர்கள் , ஒரு இரண்டு தொகுப்பு வந்தவுடன்( அவர்கள் சொன்னதை கேட்டு விட்டதாய் நம்பிக்க கொண்டு)எப்பொழுது பொது வெளிக்கு வருவீர்கள் என்று கேட்கத்  தொடங்குகின்றனர் எப்பவும் அவர்கள் விரும்புகின்ற ஒன்றாகவும் , அவர்கள் எதிர்பாரத ஒன்றாக மாறுகின்ற போது அதிர்வடைக்கின்றவர்களாகவுமே இருக்கின்றனர்
இந்த தளங்களின் இயங்கியலையும் மனதில் கொண்டும் , அதை கடந்த படியும்  தான் நான் தான்யாவின் ”சாகசக்காரி பற்றியவை” கவிதைத் தொகுப்பை வாசிக்க வேண்டியிருக்கின்றது
51 கவிதைகள் கொண்ட தான்யாவின் இத்தொகுப்பு முதல் வாசிப்பில் எனக்கு மிக அந்நியமாய் தெரியத் தொடங்க, என் எழுத்தனுபவத்தில் கவிதை குறித்த என் முன் தீர்மானங்களைப் புரந்தள்ளிவிட்டு வாசிக்க நான் கொஞ்சம் தயாராக வேண்டியிருந்தது. 
”கூடாது போன நம்பிக்கைகளும்
குலாவிச் சிதறிய நேசமும் 
என்னோடு  யுத்தமிட ”  பக்:14
 இன்றெல்லாம்  நம்பிக்கையின்மையின் உணர்வு, யுத்த வன்முறையின் குருதித் தெறித்தல்களாய் நம் முகத்தில் விழுந்த வண்ணமே இருக்கின்றன. துப்பாக்கி முனையை விட சிதைபடும் உணர்வின் முனைகள் நம் வாழ்வை அடிக்கடி பதம் பார்த்து விடுகின்றன தான்யாவின் கவிதைகளில் அந்த உணர்வின் யுத்த வலி நெடுக தென்படுகின்றன.
வழமையாக  என் தொகுப்புகளை வாசிப்பவர்கள் புராணங்களை கடந்தெழுத மாட்டீர்களா என்பார்கள்
 அது பலநேரம் பலமாயும் சில நேரம் பலவீனமாகவும் உணர்ந்துள்ளேன். அந்த பலவீனங்களை  தான்யாவின்  கவிதை ஒன்று மிக அழகாக கடந்து விடுகின்றன
”இப்போதெல்லாம் கனவில் 
கற்களே  குவிந்து கொள்கின்றன
கல்லுக்குள் அடைபட்டு
 காணாமல் போனேன்    பக்: 14
அகலிகை எனும் படிமம் இல்லாமலேயே  கவிதை சொல்ல வந்த உணர்வு நம்மில் ஊடுருவி விடுகின்றது.இதேபோல் கவிதை தொகுப்பெங்கும் நாம் எதிர்பாராத உணர்வுகளை சொல்ல வரும் சம்பவங்களின் பௌதீக மனிதர்களும் பொருட்களும் படிமங்களாய் உறைகின்றார்கள்

”நாளாக வரும் தனிமை
அடக்கிய காமம்
எழுத முடியாத குழந்தையாய்
நகர்கிறது பேனா”    பக்: 18
பேனாவும் குழந்தையும், எழுத முடியா உணர்வின் படிமங்களாய் உருக்கொள்கின்றார்கள்.
அடுத்து 
”மழை மகிழ்ச்சியான  குறியீடு என்கின்றாய்
எனக்கு மழைதனிமையின் குறியீடாய்
  • - - -  - -
பெரியவர்களின் இரசனையின் முன்னால் கவனிப்பாரற்ற
சிறுமியாய் என்னுள் தனிக்கின்றேன்.” பக்: 42
என்ற கவிதை வரிகள்  ஔவையின் 
”யாழோடும் கொள்ளா பொழுதோடும் புணரா
என்று தொடங்கும் பாடலை நினைவு படுத்தியது. தந்தை குழந்தையின் குரலை நம்புவது போல் என் குரலையும் நம்பேன், எனக் கேட்கும் ஔவையின் குரலும், கவனிப்பாரற்று என் குரல் கிடக்கின்றது என சொல்லும் தான்யாவும் ஒரே குரல் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகின்ற போது யதார்த்தம் சுடுகின்றது
நூற்றாண்டுகள் கடந்த பின்னும் , காலங்கள்  மாறி புதுமைகள் வந்து விட்டதாய் நம்பிய பின்னும் அதே வேட்கையை  கேள்வியை சமூகத்தின் முன்னால் அன்றும் இன்றும் வைப்பவர்களாகவே முதல் படி கடத்தலையே செய்து கொண்டிருப்பவர்களாக பெண்கள் இருக்க வேண்டியிருக்கின்றது என்பதை தான்யாவின் இக்கவிதை வரிகள் உரத்து சாட்சியமிடுகின்றன.
 மேலும் ஆணுடைய அடையாளமாய்  முன் மொழிதலாய், வாழ்வாய், தீர்மானங்களாய், வெற்றிகளாய், இருப்பவை எல்லாம் பெண்ணுடையது இல்லை என்பதை  இக்கவிதை அழுத்திச் சொல்லிப் போகின்றது.
அந்தப் புரிதல் ஆண்* பெண், இருவருக்கிடையே சாத்தியமாகின்ற பொழுதுதான் அடுத்த கட்ட திறவுகள் நமக்குப் புலப்படும்
பக்கம் 46 இல்  இருக்கின்ற கவிதை அதிகாரங்களின் முன்னால் மண்டியிட நேருகின்ற ( ஆண் 8 பெண் , தொழிலாளி முதலாளி,குழந்தைகள் பெற்றோர்கள், பலவீனன் பலவான், போரில் வென்றவன் தோற்றவன்) என எல்லாருக்குமான கவிதையாய் இத்தொகுப்பில் குந்தியிருக்கின்றது,
”சிறுவலியும் பொறுக்காத வளர்ந்த உடல்
அங்கலாய்த்துக் கொள்கிறது
வலி தாளாமல் துரோகியாகி விடுவானோ என…

நாளைய குழந்தைகள் காலத்தை உணராத 
துரோகக் கதைகளிலிருந்து 
விடுபடுவார்களா?
என்ற கேள்வியின் வழி நீ, நான் என எல்லாரும் மனித நேயக் கொலைகளைப் பார்த்துக்  கொண்டிருக்கும்  துரோகிகளாகவே அடையாளம் காணப் படப் போகின்றோம் என்று மிரட்டும் இக்கவிதை.
காலம் காலமாக வாழ்வும், காதலும் காமத்திற்குமாக ஆணை எதிர்பார்த்து  மாய்ந்து , காத்திருந்து  வழங்குகிறவளாக இருக்கின்ற போது இறந்தவளாகவும், எடுக்கின்றவளாக மாறும் போதும் பிச்சை கேட்பவளாகவுமே வாழ நேர்கின்ற மனக் கட்டமைப்பில்லிருந்து  விடுபட இன்னும் தொடங்கவே இல்லையோ என நினைக்க வைத்த பல கவிதைககளுக்கு மத்தியில் 
 மேற் சொன்ன கவிதை இத்தொகுப்பிலுள்ள உச்ச கட்ட வெளிப்பாடாக நான் மிக நேசிக்கின்ற கவிதையாக கவிஞர் தான்யாவின் அடுத்த கட்ட கவிதைகள் என்னவாக இருக்கும் என எதிர்பார்க்க வைப்பதுமாக இருக்கின்றது
தலைப்பில்லாத கவிதைகள் குறிப்பிட்டு சொல்லவும் எழுதவும் ஒரு வசதியின்மையைக் கொடுக்கின்றது

வாழ்வும் எழுத்தும் சிந்தனையாக
சிந்தனை எல்லாம் நிகழும் செயலாகவும் வாழ்த்துக்கள்
சாகசக் காரியிடமிருந்து நிறைய எதிர்பார்ப்பு இருக்கின்றது.
சாகசக் காரிகள் பற்றியவை( கவிதைகள்
ஆசிரியர் -தான்யா
வடலி வெளியீடு
8ஏ அழகிரி நகர் 4 வது தெரு லத்சுமி புரம்
வடபழனி சென்னை

விலை 50 ரூ

No comments:

Post a Comment