Monday, December 8, 2014

ஆசிரியர்கள்-2

ஹிந்தி டீச்சர்:-
     நான் ஏழாவது வகுப்பிற்கு வந்த போது ஹிந்தி டீச்சர் என்று அழைக்கப்பட்ட தலையெல்லாம் நரைத்து வெள்ள முடியோடு தலைக்கு பின்னால் வளையம் வைத்து கொண்டை போட்டு இருந்த டீச்சர் அறிமுகமானார்கள். இப்பொழுதெல்லாம் அவர் ஹிந்தி டீச்சர் இல்லை. ஆனால் ஹிந்தி பாடத்திட்டத்தில் இருந்த  காலத்தில் வைக்கப்பட்ட பெயர் இந்த பள்ளியிலிருந்து அகற்றப்பட்ட பின்னரும் அவருக்கு நின்று போய் விட்டது. இன்று கூட அவரது இயற் பெயர் நினைவுக்கு வராத போதுதான் பெயரையே நாங்கள் சிந்தித்ததில்லை என்று தோன்றிற்று. வளர்த்தியான உருவம், கம்பீரமான நடை, 7,8, ஆகிய மூன்று வருடங்களுக்கு வகுப்பாசிரியராக இருந்த பெருமை அவரையே சாரும். அவர் கிறித்தவர் எனவே அடிக்கடி நீதிக்கதைகளும், நன்னெறிக் கதைகளும் சொல்லுவார்.  கதை சொல்லுவதற்கு பெயர் போன அவர் எங்களை வெகுவாக ஈர்த்ததில் எங்களுக்கு ஆச்சரியமில்லை. 
 அப்பொழுதெல்லாம் அடிக்கடி தலைவலி என்று நான் கஷ்டப்பட்ட காலம். தலைவலி என்று சொல்லி, கொஞ்சம் விக்ஸ் வாங்கித் தேய்த்துவிட்டு {ஆபீஸில் இலவசமாகத் தருவார்கள்}, பின்னாடி பெஞ்சில் படுத்து தூங்கி விடுவேன். பல நேரங்களில் வகுப்பு பாடங்கள் முடிக்க முடியாமல் போய் விடும். அப்பொழுதெல்லாம் நான் எழுதப் பயந்த காலம். . பாடம் எழுதி, முடிக்க வேண்டுமென்றால் அப்படி ஒரு சோம்பல் வந்து ஒட்டிக் கொள்ளும். இதில் தலைவலியால் எழுத முடியாமல் சேர்ந்த பாடங்கள் வேறு, நினைக்கவே பயம் தரும்.
     அப்பொழுது முனியம்மாள் எனது வகுப்புத் தோழி. அவளும் நானும் எப்பொழுதும் பிரியாமல் இருப்போம்.  என் உயரமொத்த அவள் தாவணி போடுவது, பெரிய பெண் ஆவது பற்றியெல்லாம் தெரிந்தும் தெரியாமலும்  இருந்த என் சந்தேகம் பலவற்றை தெளிவு படுத்தினாள்.
      அப்படியாக ஒருநாள் நான் தலைவலி தாங்காமல் படுத்திருந்த நேரம் அவள் எழுந்து பாமாவின்  நோட்டுப் பாட புத்தகத்தில் நானே எழுதித் தந்திடவா என்று அழுது அனுமதி கேட்கிறாள் ஆசிரியையிடம்.
      உடனே அவளை எழுந்து நிற்கச் சொல்லி நட்புக்கு நல்ல இலக்கணம் இவர்கள்தான் என்று அன்று எல்லார் முன்னிலும் வெகுவாகப் பாராட்டி சிறப்புச் செய்ய, அந்த ஆசிரியை தந்த பெருமையோடு எங்களது நட்புக் காலம் 10வது படித்து முடிக்கும் வரை அதாவது பதினொராவது வகுப்பிற்கு வேறு பள்ளிக்கூடம் சேருவதற்கு நான் புறப்படும் வரை நீடித்தது. இன்று எங்கிருக்கிறாளோ முனியம்மாள் தெரியாது.  ஆசிரியர்கள் சிறந்த நண்பர்கள் என்று அறிமுகப்படுத்தி பெருமைபடுத்திய பிறகு பலர் தன் தோழியர்க்கு முடியாமல் இருந்த போது எழுதிக் கொடுப்பது மட்டுமே நட்பின் வெளிப்பாடாக செயல்படுத்திக் கொண்டிருந்தனர்.
     அடிக்கடி ஹிந்தி டீச்சர் சொல்லிக் கொண்டிருந்த பல விசயங்களில் நான் 100 சதவீதம் நம்பத் தொடங்கிய விசயம் ஒரு கத்தி வளைய வேண்டும் என விரும்பினால் அதை முழுதாக நம்பு. கத்தி உன் பார்வையிலே வளைந்து உடைந்து போகும் என்பார்.
     நான் செய்ய நினைக்கின்ற ஒவ்வொரு விசயத்தையும் நடந்து முடிந்து விடும் என 100 சதவீதம் நம்பத் தொடங்குகின்ற பழக்கம் ஹிந்தி டீச்சர் பேச்சிலிருந்து தொற்றிக் கொண்டது இன்னும் என் வாழ்வில் தொடர்கிறது. ஒரு விசயம் செய்ய வேண்டும் என்று தோன்றி விட்டால் அது பற்ரி யார் என்ன மாற்ருக் கருத்து சொன்னாலும் நான் எப்படி செய்து முடிக்கப் போகின்றேன் என்பது பற்றியே எனது சிந்தனை இருக்கும். அது என்னுள் தோன்றிய சிந்தனை மேல் நான் வைக்கப் பழகிய நம்பிக்கையின் அழுத்தமாக மாறிப் போனது.

 ஆனால் நம்பிக்கை பற்றி இவ்வளவு பேசிய ஹிந்தி டீச்சர் ஒரு நாள் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதுவும் ஓய்வு பெற்ற வயதில் என்ற செய்தி கிடைத்த போது நம்பவே முடியவில்லை. உடையும் என நம்பிய கத்தி கைபிடித்தவரையே பதம் பார்த்துவிட்டது.      

No comments:

Post a Comment