Monday, December 14, 2015

மனதோடு சில கேள்விகள்

மனதோடு சில கேள்விகள்
மக்கள் சக்தி இயக்கம்
திலகபாமா
டிசம்பர் 1ம் தேதி சென்னையில் தொடங்கிய கனத்தமழை, அதைத் தொடர்ந்த வெள்ளம் பெருந் துயரத்தை மட்டுமல்லாது அதைத் தொடர்ந்து வந்த மனித நேய உதவிகளால் பலரது மனங்களில் இனம்புரியாத மகிழ்வையும் சக்தியையும் தந்து போயிருக்கின்றது. தொடர் பத்து ஆண்டுகளாக அறிவிப்புகளாலும் படம் காட்டுதலாலும் அரசியல் இதுதான் என்று நாமே அறியாமல் நமக்கு முன்னிறுத்தி விட்ட அரசியல் களம், கட்சிகள், அவர்களின் செயல் திறன்கள் எல்லாம் வெற்று கூடுகளே என்றும் அது உள்ளீடுகள் ஏதுமற்றவை என்றும் உணர்த்திவிட்டுப் போயிருக்கின்றன
            ஒரு  அரசு நலத் திட்டத்தில் 40 சதவீதம்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிந்திருந்தும் சகித்தவர்களாக இருந்து வந்து கொண்டிருந்த மக்கள் இவ்வளவு நாளும் சகிப்புத் தன்மையால் நாம் இழந்தது வெறும் நம் வரிப்பணம் மட்டுமல்ல நிர்வாகம் என்ற ஒன்றே நம்மிடம் அற்றுப் போகின்ற சூழலையும்தான் என்று இந்த வெள்ளம் நமக்கு புரிய வைத்துப் போயிருக்கின்றது
            இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தனியார்  நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டர்கள், தன்னார்வ அமைப்புகள், திடீரென அமைப்புகளாக ஒன்று கூடி பெரும் பங்கு ஆற்றியவர்கள் கையிலிருக்கும் மூலாதாரத்தை சிக்கனமாக பலருக்கு பயன்படுத்தியதில் பெரிதாக கவனத்துக்கு வந்த தனி நபர்கள் என்று  பலரும், பல் அமைப்புகளும் அதிகப் பணிகள் செய்து அரசாங்கம் இல்லாமலும் ஒரு மீட்டெழுதல் நிகழமுடியும் என்று காட்டியிருப்பதோடு, அரசாங்கம் இல்லாமல் வெறும் காணொளி காட்சி மூலம் படம் காண்பித்து கொண்டும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டும் இருப்பதை பெருஞ்செயலாகப் பேசுவதை, உள்ளீடுகள் அற்ற உற்பத்தி பெறுமானம் அற்ற வெறும் படம் காட்டும் வேலைகள் என்று புரியத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்த இக்கட்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட பலரும் அரசு பணியிலும், அரசின் ஒப்பந்தங்களிலும் வேலை செய்வோர்களும் கூடத்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  ஆனால் அவர்களே அரசாங்கத்திற்கு வேலை செய்வது என்று வந்து விட்டால் மட்டும்தான் பல பொறியாளர்களை வைத்து போடுகின்ற வடிநீர் வாய்க்கால்கள்  கூட  நீர் திரும்பி வருவதாய் அமைகின்றன. எங்கே போகின்றது உங்கள் பொறியியல் திறமைகள்?
            அதே நேரம் சாதாரண வீட்டு வேலை செய்யும் கொத்தனார் கூட மிகச் சிறப்பாக நீர் வடிவதற்கான திட்டமிடுதலை செய்து விட முடிகிற போது அரசாங்கப் பணியில் ஈடுபடுகின்ற பொறியாளர்களால் பல பொறியாளர்களாலும், மேலாண்மை நிர்வாகத்தாலும், நிதி வசதியாலும் கட்டமைக்கப்பட்ட அரசு இயந்திரத்தினால் ஏன் செயல்படவே  முடியாமல் போய் மக்கள் (நம்) வரிபணத்தை மூழ்கவிடாமல் இருக்கக் கூடிய வடிநீர் அமைப்பு கொண்ட சாலையை போட முடியாமல் போகின்றது.
நமக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது .
·         இந்தக் கட்சி போய் அந்தக் கட்சி வந்தாலும் இதே நிலைமைதான் கொள்ளையடிப்பதில் தான் நிர்வாகத் திறமை கூடுகிறதே ஒழிய, திறம்படச் செயலாற்றுவதில் இல்லை.
·         அதிகாரத்தில் கட்சிகளில் வண்ணங்கள் மாறினாலும் கீழ்மட்டத்தில் கட்சிப்பணிகளில் அரசு அலுவலகத்தில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஒரே வர்ணமாகிப் போகிறார்கள் என்பது
·         இன்றைக்கு இருக்கின்ற ஆட்சி பிடிக்கவில்லை என்றால் பிடித்த ஆட்சியோ, தலைவனோ எதிரணியிலும் இல்லை. கட்சி பெயரையும், தலைவன் பெயரையும் சின்னத்தையும் தூக்கி விட்டால் எல்லா அரசியல் கட்சி குறுநிலமன்னர்களின் நோக்கம் என்பது ஒன்றே அரசியல் பணி என்பது சம்பாரிப்பது என்பதாக
·         சம்பாரிக்கும் எண்ணம் உள்ளவன் அரசு இயந்திரத்திற்குள் இருக்கும்  வரை  நான் எது கொடுத்தும் சாதித்துக் கொள்ளலாம் என்பதாக பொதுஜனமும் மாறிப் போயிருப்பது.
·         இலவசங்கள் எனும் வார்த்தை ஒரு மாயாஜாலவார்த்தை எதுவும் இலவசம் இல்லை. நம் வரிப்பணத்தில் நமக்கே திருப்பி வழங்கப்பட இருக்கின்ற நலத்திட்டமே அது அன்றி இலவசம் விலை இல்லா பொருட்கள் என எல்லாமே வார்த்தை ஜாலம் தான்.
இப்படி எல்லாமே தெரிந்திருந்தும்  யாரையும் திருத்த முடியாது என தள்ளிப் போகும் பொதுஜனம். தானே இறங்கிட வேண்டியதுதான் என முடிவெடுக்க இந்த வெள்ள பாதிப்பு ஒரு களம் அமைத்துக் கொடுத்துள்ளது அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திக்க
மிகவும் மகிழ்ச்சியளிக்கின்ற இந்த களப்பணிக் கிடையில் நம்மிடையே இருக்கின்ற அடுத்த கேள்வியும்
Ø  சென்சேசனல் விசயத்திற்கும், பணிக்கும் என்று சேர்ந்து படி இறங்கிய சமூகம், திரும்ப  தூங்க  போய் விடுமா?   அல்லது   இன்னுமொரு சென்சேசனுக்காக காத்திருக்கப் போகிறதா? எப்பவாவது முழித்துக் கொள்ளுதல் என இல்லாது, எப்பவும் விழித்திருக்கவும் சமூகம் பணியை வாழ்வியலில் பூக்களுக்கிடை   ஒரு நூலாய் இணைத்துக் கொண்டே போகத் தயாராயிருக்கிறதா என்பது முதல் கேள்வி?
Ø  நல்லனவாய் இருக்க உதாரணங்களும் மாதிரிகளும் இல்லாது போயிருக்க தவறுகள் தவறில்லை என ஆரம்பித்து ஒன்றை மிஞ்சி ஒன்று என்று வில்லத்தனத்தை மிஞ்சிய வில்லத்தனம் என்று காண்பித்துக் கொண்டிருந்த சமூகம் முதல் முறையாக நல்லதை நடத்துவதற்கு தானே உதாரணமாயிருக்கு இன்றைக்கு. இன்னிலை தொடர் பணிக்கு எப்பொழுது தயாராகும் இச்சமூகம்.
Ø  சமூகப் பொறுப்புணர்வு அற்றவர்களாக இருந்து விட்டோமோ என்ற குற்றவுணர்வு களைய நிவாரணப் பணிகளை  பரிகாரமாய் செய்ததையே திரும்ப திரும்ப பேசிக் களைக்க போகின்றதா?


Ø   இல்லை  கட்சி பணி என்று இல்லாமல், இயக்கப் பணியாக சமூகப்பணி ஆற்றுவது சுயமரியாதை இயக்க காலத்தோடு போயிற்று என்று இல்லாது இன்று விழித்தெழுந்த சமூகம் புதிய பாதையைத் தொடங்குமா? தொடருமா?

No comments:

Post a Comment