Monday, December 14, 2015

மனதோடு சில கேள்விகள்

மனதோடு சில கேள்விகள்
மக்கள் சக்தி இயக்கம்
திலகபாமா
டிசம்பர் 1ம் தேதி சென்னையில் தொடங்கிய கனத்தமழை, அதைத் தொடர்ந்த வெள்ளம் பெருந் துயரத்தை மட்டுமல்லாது அதைத் தொடர்ந்து வந்த மனித நேய உதவிகளால் பலரது மனங்களில் இனம்புரியாத மகிழ்வையும் சக்தியையும் தந்து போயிருக்கின்றது. தொடர் பத்து ஆண்டுகளாக அறிவிப்புகளாலும் படம் காட்டுதலாலும் அரசியல் இதுதான் என்று நாமே அறியாமல் நமக்கு முன்னிறுத்தி விட்ட அரசியல் களம், கட்சிகள், அவர்களின் செயல் திறன்கள் எல்லாம் வெற்று கூடுகளே என்றும் அது உள்ளீடுகள் ஏதுமற்றவை என்றும் உணர்த்திவிட்டுப் போயிருக்கின்றன
            ஒரு  அரசு நலத் திட்டத்தில் 40 சதவீதம்தான் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிந்திருந்தும் சகித்தவர்களாக இருந்து வந்து கொண்டிருந்த மக்கள் இவ்வளவு நாளும் சகிப்புத் தன்மையால் நாம் இழந்தது வெறும் நம் வரிப்பணம் மட்டுமல்ல நிர்வாகம் என்ற ஒன்றே நம்மிடம் அற்றுப் போகின்ற சூழலையும்தான் என்று இந்த வெள்ளம் நமக்கு புரிய வைத்துப் போயிருக்கின்றது
            இந்த வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட தனியார்  நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டர்கள், தன்னார்வ அமைப்புகள், திடீரென அமைப்புகளாக ஒன்று கூடி பெரும் பங்கு ஆற்றியவர்கள் கையிலிருக்கும் மூலாதாரத்தை சிக்கனமாக பலருக்கு பயன்படுத்தியதில் பெரிதாக கவனத்துக்கு வந்த தனி நபர்கள் என்று  பலரும், பல் அமைப்புகளும் அதிகப் பணிகள் செய்து அரசாங்கம் இல்லாமலும் ஒரு மீட்டெழுதல் நிகழமுடியும் என்று காட்டியிருப்பதோடு, அரசாங்கம் இல்லாமல் வெறும் காணொளி காட்சி மூலம் படம் காண்பித்து கொண்டும் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டும் இருப்பதை பெருஞ்செயலாகப் பேசுவதை, உள்ளீடுகள் அற்ற உற்பத்தி பெறுமானம் அற்ற வெறும் படம் காட்டும் வேலைகள் என்று புரியத் தொடங்கியிருக்கின்றார்கள். இந்த இக்கட்டில் மீட்பு பணியில் ஈடுபட்ட பலரும் அரசு பணியிலும், அரசின் ஒப்பந்தங்களிலும் வேலை செய்வோர்களும் கூடத்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.  ஆனால் அவர்களே அரசாங்கத்திற்கு வேலை செய்வது என்று வந்து விட்டால் மட்டும்தான் பல பொறியாளர்களை வைத்து போடுகின்ற வடிநீர் வாய்க்கால்கள்  கூட  நீர் திரும்பி வருவதாய் அமைகின்றன. எங்கே போகின்றது உங்கள் பொறியியல் திறமைகள்?
            அதே நேரம் சாதாரண வீட்டு வேலை செய்யும் கொத்தனார் கூட மிகச் சிறப்பாக நீர் வடிவதற்கான திட்டமிடுதலை செய்து விட முடிகிற போது அரசாங்கப் பணியில் ஈடுபடுகின்ற பொறியாளர்களால் பல பொறியாளர்களாலும், மேலாண்மை நிர்வாகத்தாலும், நிதி வசதியாலும் கட்டமைக்கப்பட்ட அரசு இயந்திரத்தினால் ஏன் செயல்படவே  முடியாமல் போய் மக்கள் (நம்) வரிபணத்தை மூழ்கவிடாமல் இருக்கக் கூடிய வடிநீர் அமைப்பு கொண்ட சாலையை போட முடியாமல் போகின்றது.
நமக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது .
·         இந்தக் கட்சி போய் அந்தக் கட்சி வந்தாலும் இதே நிலைமைதான் கொள்ளையடிப்பதில் தான் நிர்வாகத் திறமை கூடுகிறதே ஒழிய, திறம்படச் செயலாற்றுவதில் இல்லை.
·         அதிகாரத்தில் கட்சிகளில் வண்ணங்கள் மாறினாலும் கீழ்மட்டத்தில் கட்சிப்பணிகளில் அரசு அலுவலகத்தில் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள ஒரே வர்ணமாகிப் போகிறார்கள் என்பது
·         இன்றைக்கு இருக்கின்ற ஆட்சி பிடிக்கவில்லை என்றால் பிடித்த ஆட்சியோ, தலைவனோ எதிரணியிலும் இல்லை. கட்சி பெயரையும், தலைவன் பெயரையும் சின்னத்தையும் தூக்கி விட்டால் எல்லா அரசியல் கட்சி குறுநிலமன்னர்களின் நோக்கம் என்பது ஒன்றே அரசியல் பணி என்பது சம்பாரிப்பது என்பதாக
·         சம்பாரிக்கும் எண்ணம் உள்ளவன் அரசு இயந்திரத்திற்குள் இருக்கும்  வரை  நான் எது கொடுத்தும் சாதித்துக் கொள்ளலாம் என்பதாக பொதுஜனமும் மாறிப் போயிருப்பது.
·         இலவசங்கள் எனும் வார்த்தை ஒரு மாயாஜாலவார்த்தை எதுவும் இலவசம் இல்லை. நம் வரிப்பணத்தில் நமக்கே திருப்பி வழங்கப்பட இருக்கின்ற நலத்திட்டமே அது அன்றி இலவசம் விலை இல்லா பொருட்கள் என எல்லாமே வார்த்தை ஜாலம் தான்.
இப்படி எல்லாமே தெரிந்திருந்தும்  யாரையும் திருத்த முடியாது என தள்ளிப் போகும் பொதுஜனம். தானே இறங்கிட வேண்டியதுதான் என முடிவெடுக்க இந்த வெள்ள பாதிப்பு ஒரு களம் அமைத்துக் கொடுத்துள்ளது அடுத்த கட்டத்தை நோக்கி சிந்திக்க
மிகவும் மகிழ்ச்சியளிக்கின்ற இந்த களப்பணிக் கிடையில் நம்மிடையே இருக்கின்ற அடுத்த கேள்வியும்
Ø  சென்சேசனல் விசயத்திற்கும், பணிக்கும் என்று சேர்ந்து படி இறங்கிய சமூகம், திரும்ப  தூங்க  போய் விடுமா?   அல்லது   இன்னுமொரு சென்சேசனுக்காக காத்திருக்கப் போகிறதா? எப்பவாவது முழித்துக் கொள்ளுதல் என இல்லாது, எப்பவும் விழித்திருக்கவும் சமூகம் பணியை வாழ்வியலில் பூக்களுக்கிடை   ஒரு நூலாய் இணைத்துக் கொண்டே போகத் தயாராயிருக்கிறதா என்பது முதல் கேள்வி?
Ø  நல்லனவாய் இருக்க உதாரணங்களும் மாதிரிகளும் இல்லாது போயிருக்க தவறுகள் தவறில்லை என ஆரம்பித்து ஒன்றை மிஞ்சி ஒன்று என்று வில்லத்தனத்தை மிஞ்சிய வில்லத்தனம் என்று காண்பித்துக் கொண்டிருந்த சமூகம் முதல் முறையாக நல்லதை நடத்துவதற்கு தானே உதாரணமாயிருக்கு இன்றைக்கு. இன்னிலை தொடர் பணிக்கு எப்பொழுது தயாராகும் இச்சமூகம்.
Ø  சமூகப் பொறுப்புணர்வு அற்றவர்களாக இருந்து விட்டோமோ என்ற குற்றவுணர்வு களைய நிவாரணப் பணிகளை  பரிகாரமாய் செய்ததையே திரும்ப திரும்ப பேசிக் களைக்க போகின்றதா?


Ø   இல்லை  கட்சி பணி என்று இல்லாமல், இயக்கப் பணியாக சமூகப்பணி ஆற்றுவது சுயமரியாதை இயக்க காலத்தோடு போயிற்று என்று இல்லாது இன்று விழித்தெழுந்த சமூகம் புதிய பாதையைத் தொடங்குமா? தொடருமா?

Wednesday, December 9, 2015

இலவசமாய் ஏமாற்று வேலைகள்

'ம்' என்றால் சிறைவாசம், 'ஏன்' என்றால் வனவாசம் என்றிருந்த காலங்களை உடைக்க சிந்திய இரத்தமும் பண்ணிய தியாகங்களும் , சிந்தனை வழியாகவும் செயல் வழியாகவும் உழைத்த உழைப்புகளும் நினைந்து நினைந்து இன்றைய நிலையின் மகத்துவத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம் . உருளுகின்ற உலகம் இரவைப் பகலாகவும் பகலை இரவாகவும் மட்டுமல்ல மனிதனை நாகரீகம் எனும் படிக்கட்டுகளில் ஏற்றி விடவும் முயற்சிக்கிறது. உணவு , உடை , பழக்க வழக்கங்கள் எவை மாறிய பொதும் வாழ்வதற்கான ஆசையும் அதற்கான நேர்மையான உழைப்பும், நேர்மையாய் வாழ்வதற்கான போராட்டமும் மாறாததே.
புதுமைப் பித்தன் சொல்லுவார் 200 ஆண்டுகளாக சீலைப்பேன் வாழ்வு நடத்தி விட்டோம் என்று. அப்படியான செக்கு மாட்டுத் தன சிந்தனையை கலைத்து புதிதாய் இன்றைய தேவைக்கு கட்டமைத்து, ஒழுங்கு செய்வதற்கான சிந்தனையை வடிவமைப்பது இலக்கியங்கள். அதற்கு செயல் வடிவாக்கம் கொடுப்பது மனிதனின் பல்வேறு போராட்டங்களும், அதன் ஒட்டு மொத்த சொல்லாடலாய் திகழும் அரசியலும்.

அப்படி சிந்தனை வழியாக செயலும், செயலின் வழியாக மீண்டும் சிந்தனையும் மாறி மாறி திருத்தப் படுகின்றன, வடிவமைக்கப் படுகின்றன, புதிதாய் தோற்றுவிக்கப் படுகின்றன. அரசியலின் அநாகரீகங்களின் உச்ச கட்டங்களை தேர்தலின் மிக நெருங்கிய இந்த கால கட்டத்தில் சந்தித்து வருகின்றோம்.

ஊடகங்கள் , அதிலும் தொலைக்காட்சியும், செய்தித் தாள்களும் கட்சி கட்டிக் கொண்டு இரண்டாய் நாளாய் பிரிந்து கிடக்கின்ற வேளையில் சாமான்ய மனிதனை கிறுக்காக்குவதையும் தாண்டி , ஒவ்வொரு அறிவிப்பின் பல்வேறு பக்கங்களையும் யோசிக்க வைத்தும் போகின்றன. ஏன் எதற்கு யார் என்பது கூட அறியாது சின்னங்களில் குத்தி விட்டு வரும் நிலை மாறியிருக்கின்றது. சொல்வதை எல்லாம் நம்பி விடுகின்ற நிலை தாண்டி சொல்வதற்கு பின்னால் இருக்கின்ற மறைக்கப் பட்ட பகுதிகளை வெளிச்சமிட்டு காட்டியும் போகின்றன அவைகளே அறியாது ஊடகங்கள்.

இலவசங்களாய் வந்து விழுகின்ற அறிவிப்புகள் , தேர்தல் வாக்குறுதிக்கென்று ஏழுமலை ஏழுகடல் தாண்டி வைக்கப் பட்ட அரக்கனின் உயிராய் பாட்டி சொன்ன கதைகளின் புனைவுகளையும் வென்று சிந்துபாத் கதையாய் நீளப் போகின்றன. 

அறிவிக்கப் பட்ட இலவசங்கள் மக்களுக்காகவா? அல்லது அடுத்த கட்சிக் காரனை விட பெரியதாய் சொல்லியிருக்கின்றேன் என்று பூச்சாண்டி காட்டவா? எதை இலவசமாய் தரப் போகின்றார்கள் ? முதலில் அவை இலவசங்கள் தானா? எந்தக் காலத்தும் யாரும் எதையும் சும்மா தந்து விட வும் சும்மா பெற்று விடவும் வாய்ப்பே இல்லை என்பது பொது ஜனம் அறியாததா? அதுவும் இன்றைய வணிகச் சூழலில், எல்லாவற்றுக்கும் விலை பேசும் கால கட்டத்தில் அதெல்லாம் சாத்தியம் தானா?

மக்கள் பணத்தையே சேமிப்பாக்கி அதிலேயே கடனும் தந்து , அதற்கெனவே வட்டி வசூலிக்கும் சில சேமிப்புத் திட்டங்களைப் போல் , மக்கள் வரிப்பணத்திலேயே ஆட்சி நடத்தும் அரசாங்கங்கள் மனிதனின் வாழ்வதற்கான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது அதன் கடமையாக இருக்க எப்படி சாத்தியமாகின்றது? கடமைகளை? இலவசங்களாய் சொல்லிப் போக? உணவும் உடையும் இருப்பும் வாழ்வை உயர்த்தும் கல்வியும் தொடரும் வாழ்வும் பயணத்தில் மக்களின் நோய் , வேலையின்மை முதுமை என்று பற்பல காலங்களில் உருவாகும் அடிப்படி தேவைகளுக்கு சாமான்யனின் முதுகு தடவி தோள் கொடுக்கும் அரசாங்கத்தை மக்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கும் மக்களாட்சியால் இதுவரை சாத்தியமாக்க முடிந்ததா? முடிந்திருந்தால் இன்று இலவச அறிவிப்புகளாய் சொல்லப் படுபவை எல்லாம் திட்டங்களாய் அறிவிக்கப் பட்டிருக்கும் , சாதாரண வியாபாரியின் விற்பனை தந்திரத்தோடு  ”இலவசமெனும்பேரில் அறிவிக்கப் பட்டிருக்காது எந்த கட்சித் தலைவரும் அவர்கள் சொந்த உழைப்பின் பணத்திலிருந்து இலவசமாய் துன்பம் கண்டு துயரம் கண்டு தானம் தரும் எண்ணத்தில் தந்து விட வில்லைஇலவசங்களை

மகள் உழைத்து சேமித்த சேமிப்பிலிருந்து நேராகவும் மறை முகமாகவும் கட்டிய வரிப் பணத்திலிருந்து மக்களுக்கே அவரவர்கள் பெருந்தன்மையோடு இலவசமாய் கொடுக்கப் போவதாய் அறிவித்துப் போகின்றார்கள். அறிவிப்புகள் எல்லாம் நிஜங்கள் போல தோற்றம் தரும் மாயைகளே.

சாமான்ய மனிதனாய் இருந்து அரசாங்க அலுவலகத்தில் தனக்கு சேர வேண்டிய உரிமைகளை கூட பெற்றுக் கொள்ள முடியவில்லையே. தெரிந்த ஆட்களோடுதான் செயல்படுத்த முடிகின்றது. ஊனமுற்றவர்களும் வயோதிகர்களும் யாரையும் எதிர்பார்க்காது வாழக் கூடிய தன்னிச்சையான வாழ்வுக்கு யார் உத்திரவாதம் தர முடியும்? மொத்தத்தில் 'இலவசம்' எனும் வார்த்தையின் அர்த்தத்தை மாற்றி விட்டுப் போயிருக்கின்றார்கள் 'ஏமாற்றென்று'.

mathibama@yahoo.com












சட்டம் போட்டுதனிநபரின் (ஜெயலலிதா) பிறந்த நாளை கொண்டாட வைக்கும் அதிகார துஷ்பிரயோகம்

இலவசங்களாய் ஏமாற்றுகள்எனும் தலைப்பில் 2006 இல்  முன்பு ஒரு கட்டுரை எழுதினேன். அதில் மக்கள் பணத்தையே சேமிப்பாக்கி அதிலேயே கடனும் தந்து , அதற்கெனவே வட்டி வசூலிக்கும் சில சேமிப்புத் திட்டங்களைப் போல் , மக்கள் வரிப்பணத்திலேயே ஆட்சி நடத்தும் அரசாங்கங்கள் மனிதனின் வாழ்வதற்கான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டியது அதன் கடமையாக இருக்க எப்படி சாத்தியமாகின்றது? கடமைகளை? இலவசங்களாய் சொல்லிப் போக? உணவும் உடையும் இருப்பும் வாழ்வை உயர்த்தும் கல்வியும் தொடரும் வாழ்வும் பயணத்தில் மக்களின் நோய் , வேலையின்மை முதுமை என்று பற்பல காலங்களில் உருவாகும் அடிப்படி தேவைகளுக்கு சாமான்யனின் முதுகு தடவி தோள் கொடுக்கும் அரசாங்கத்தை மக்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கும் மக்களாட்சியால் இதுவரை சாத்தியமாக்க முடிந்ததா? முடிந்திருந்தால் இன்று இலவச அறிவிப்புகளாய் சொல்லப் படுபவை எல்லாம் திட்டங்களாய் அறிவிக்கப் பட்டிருக்கும் , சாதாரண வியாபாரியின் விற்பனை தந்திரத்தோடு  ”இலவசமெனும்பேரில் அறிவிக்கப் பட்டிருக்காது எந்த கட்சித் தலைவரும் அவர்கள் சொந்த உழைப்பின் பணத்திலிருந்து இலவசமாய் துன்பம் கண்டு துயரம் கண்டு தானம் தரும் எண்ணத்தில் தந்து விட வில்லைஇலவசங்களை

  “ இலவசங்களாய் நாங்கள் தருகின்றோம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள்  யாருடைய பணத்தில் இருந்து கொடுக்கின்றார்கள். மக்கள் நலனுக்காக செலவழிக்கப் மக்கள் தந்த வரி  பணத்திலிருந்து தானே . சொந்தக் காசு போட்டு எதுவும் நிகழ்த்தவில்லையே பின் ஏன் அதை நான் வழங்கினேன் எனும் வீண் தம்பட்டம்
அடுத்து வந்த அரசுவிலைஇல்லா பொருட்கள்என்று பேரை மாத்தி வழங்கினாலும் அதுவும் யாருடைய சொந்த கைக்காசுமாக இல்லாமலிருக்கும் போது அதில் நான் வழங்கினேன் என்ற தம்பட்டம் மட்டும் ஓயவில்லை என்பதற்கு கணினியில் கூட முதலமைச்சர் படத்தை போட்டு தந்து கொண்டிருப்பது ஒரு உதாரணம்.
  இன்று தமிழக முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் பணி புரிந்து கொண்டிருக்கும் எல்லா மருத்துவமனைக்களுக்கும் ஒரு அறிவிப்பு அனுப்பப் பட்டிருக்கின்றது. அதில் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் 24ம் தேதிக்குள்  660 இலவச மருத்துவமுகாம்களை அரசின் சார்பில்  சுகாதாரத் துறை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் அது சம்பந்தப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்குள் இணைந்திருக்கும் தனியார் மற்றும் அரசு  மருத்துவமனைகள் எங்கெங்கு எந்தெந்த தேதிகளில் இலவச மருத்துவ முகாம்களை நடத்த வேண்டுமென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எழுதப்பட்ட உத்தரவில் இது தமிழக முதலமைச்சரின் 66ஆவது  பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான  ஏற்பாடுகள் என்பதை சொல்லப்பட்டிருக்காவிடினும் 660 மருத்துவ முகாம்கள் என்ற எண்ணிக்கையும் இந்த அறிவிப்பை முதலில் வாய் மொழியாகத் தந்த அதிகாரிகளும் இதை உறுதி செய்தார்கள். ஒரு தனி நபரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை அரசு செலவில் எப்படி நடத்த முடியும்மன்னர்களின் பிறந்த நாட்களுக்கு கைதிகளை விடுதலை செய்யும் அல்லது திட்டங்களை அறிவிக்கும் மன்னர் ஆட்சியின் மனோபாவம் 66ஆவது ஆண்டுகள் குடியரசினைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் ஜனநாயக நாட்டிலும் உலவிக் கொண்டிருக்கின்றது என்பது துரதிஷ்டம்தான். இதில் அறநிலைத் துறை அமைச்சர்கள் எல்லாக் கோவில்களிலும் அரசின் பணத்திலிருந்தே முதலைமைச்சரின் பிறந்தநாளுக்கான  பூஜை ஏற்பாடுகள் செய்ய அறநிலைத் துறையிலிருந்தே உத்தரவு போட்டே செய்வார்கள் போலும். 660 என்ன 6660 இலவச மருத்துவ முகாம்களை வேண்டுமானாலும் நடத்திக் கொள்ளட்டும். தனி நபரின் பிறந்தநாளை மக்கள் பணத்திலிருந்து கொண்டாட இவர்களுக்கு யார் உரிமை தந்தது. 6660 இலவச மருத்துவ முகாம்களை நடத்துவதற்கான எல்லாவித பண பலங்களையும் தமிழக முதலமைச்சர் மட்டுமல்ல அவர்கள் கட்சியில் இருக்கும் ஒவ்வொரு மந்திரியும் சட்டமன்ற உறுப்பினர்களும் கூட பெற்றிருக்கிற  போது கடைத்தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் மனப் போக்கு எதற்கு. அதுவும் தெள்ளத் தெளிவாகஅழுத்திக் கேட்டால் அது நானில்லைஎன்று சொல்லிக் கொள்ளும் விதமாக அரசாங்க ஆணையை தயார் செய்ய யார் தான் இவர்களுக்கு கற்றுக் கொடுக்கின்றார்களோ. காசை எடுத்துட்டு போனால்தான ஊழலுன்னு சொல்லுவான். நான் பேரு வாங்க அவன் பணத்தை அவனுக்கே செலவழிச்சா கண்டுக்காம போயிடும் பாமர சனம் என்பதையும், தனியார் மருத்துவமனைகள் இதை எதிர்த்து கேள்வி கேட்க எதிரில் ஆட்களும் இல்லாத சூழலையும் உண்டாக்கி வென்று போய் விடுவதும் என்னே சாமர்த்தியம்.
இவ்வளவுக்கு மாதந்தோறும் ஒரு இலவச மருத்துவ முகாம்களை  முதலமைச்சர் காப்பீடு  திட்டத்தின் கீழ்  இயங்கி வரும் தனியார் மருத்துவமனைகள் நடத்தி வருக்கின்றன. அதன் அடிப்படையில் ஏற்கனவே நீங்கள் ஏற்பாடு செய்திருக்கும் முகாம்களை ரத்து செய்து விட்டு எங்கள் ஆணைக்கு அவசரமாக அடிபணியுங்கள் என உத்தரவு சொல்கின்றது. ஒரு வாரத்திற்குள் அவர்கள் சொல்லுகின்ற கிராமத்தில் இடவசதி ஏற்பாடு , உள்ளூர் அனுமதிகள் இவ்வளவும் பற்றிய எந்த அக்கறையும் இல்லை.
யார் கண்டது 25ம் தேதிக்குப் பிறகு 660 இலவச மருத்துவ முகாம்களை நடத்தியதாக முதலமைச்சரிடம் மாண்புமிகு சுகாதாரத் துறை ஆசி பெறக் கூடும்.
பார்த்துவிட்டு ரிமோட்டில் சேனலை மாத்தி விட்டு இரசித்தபடி இருப்போம் வாழ்க ஜனநாயகம்!